வார இதழில் படத்தின் கதை வெளியான பிறகு தியேட்டரில் வெற்றிகொடி நாட்டிய மௌன கீதங்கள்

26

கே.பாக்யராஜின் மூன்றாவது படம் மௌன கீதங்கள். இதில் தான், தான் யார் என்பதை, தமிழ் ரசிகர்களுக்கு நிரூபித்தார். வாரப் பத்திரிகை ஒன்றில், இந்தப் படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, தொடர்கதையாக வெளியானது. அதன் பின் படமாக வெளியானது. அதாவது, கதை முழுவதும், மக்களுக்கு தெரிந்தாலும், அவர்களை, திரையரங்கத்திற்கு படையெடுத்து வரவழைத்தது, கே.பாக்யராஜின் திரைக்கதை மாயாஜாலம் ஒன்றே!

சந்தர்ப்பவசத்தால் தவறு செய்யும் கணவரை பிரிந்து, தன் மகனுடன் வாழும் மனைவி. அவர்கள் இருவரும், ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர்; வீடும் எதிரெதிராக அமைந்திருக்கிறது. இவர்கள் மீண்டும், ஒன்று சேர்ந்தனரா என்பது தான், திரைக்கதை.

கணவன் – மனைவி உறவின் அர்த்தங்களை, நகைச்சுவையுடன் கூறியதில் தான், படம் வெற்றிக்கொடியை பறக்கவிட்டது.கணவராக, பாக்யராஜும், மனைவியாக சரிதாவும் நடித்திருப்பர். அதிலும் சரிதா, வேற, ‘லெவல்!’

‘மூக்குத்திப் பூ மேலே, மாசமோ மார்கழி மாசம், டாடி டாடி’ போன்ற, ‘சூப்பர் ஹிட்’ பாடல்களை தந்தார், கங்கை அமரன். நல்ல இசையமைப்பாளரான அவரை, தமிழ் திரையுலகம் ஏனோ தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின், எங்கேயும் மவுன கீதங்கள் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது!