ரஜினிகாந்திற்கு தலைவா என்று கூறி நன்றி தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்


இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலயில் கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் நேற்று டுவிட்டரில் பதிவு செய்தார்.

ஆனால் அந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட புகார்கள் வந்ததால் டுவிட்டர் இந்தியா அந்த வீடியோவை அதிரடியாக நீக்கியது.ஆனால் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்ததோடு தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு புகார் செய்யப்பட்டதால் டுவிட்டர் இந்தியா அந்த வீடியோவை நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த விளக்கத்திற்கு டுவிட்டர் இந்தியா நன்றி தெரிவித்ததுடன் ரஜினியை அனைவரும் அழைப்பது போல ‘தலைவா’ என்று அழைத்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் இந்தியா கூறியிருப்பதாவது: COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா என்று தெரிவித்துள்ளது

டுவிட்டர் இந்தியாவின் இந்த டுவிட்டுக்கு ரஜினி ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பதும், ரஜினியின் வீடியோ குறித்து கேலி, கிண்டல் செய்த நெட்டிசன்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.