புதிய கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவக்கம்

11

கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது படப்பிடிப்புகள் துவங்கப்படாததால் தொலைக்காட்சிகளில் படங்கள் மற்றும் பழைய சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் 20 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 60 பேருடன் படப்பிடிப்பு நடத்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்தது. அதற்கும் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. சீரியல்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் ஐதராபாத், பெங்களூரு, கொச்சி பகுதிகளில் இருப்பதால் அவர்கள் வருவதற்காக காலஅவகாசம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, முன்னாள் தலைவர் ராதிகா சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்திற்கு பிறகு குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது: சின்னத்திரை படப்பிடிப்புகளை வருகிற 10ந் தேதி முதல் தொடங்க முடிவு செய்து இருக்கிறோம். படப்பிடிப்பில் 60 பேர்கள் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களை சேர்க்காமல், 40 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ள அவ்வப்போது கிருமிநாசினி தெளிப்பது, ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்தாமல் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களை மாற்றுவது போன்ற விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.

முன்பு படக்குழுவினர் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. அதில் சில சிக்கல்கள் இருப்பதால், நடிகர்-நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தே சாப்பாடு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.