எப்படி இருக்கா உன் ஆளு ? கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்

26

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தை யாரும் மறக்க முடியாது. கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் நம் மனதிற்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர்கள். இந்தப் படத்தின் 2 பாகத்தை இயக்குநர் கவுதம் மேனன் எடுக்கப் போகிறார். அதற்கு முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்று குறும்படத்தை எடுக்க உள்ளார் என கடந்த வாரம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கும் இடையில் சினிமா ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த குறும்படம் கார்த்திக், ஜெஸ்ஸி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 12 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த குறும்படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரின் போன் வசனங்கள் மட்டுமே உள்ளன. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் பேசினாலும், ஒவ்வொரு வசனத்திலும் ஒரு கவிதை இருக்கின்றது என்பதை குறும்படத்தை பார்க்கும் போது உணர முடிகிறது. குறிப்பாக ‘எப்படி இருக்கான் உன் ஆளு’ என்ற சிம்புவின் கேள்விக்கு த்ரிஷா தனது கணவர் குறித்து கூறும் பதில் கவுதம் மேனனுக்கு உரிய கவிதைத்தனம்,

மேலும் சிம்பு இப்பவும் த்ரிஷாவை காதலிப்பதாக கூற, அதற்கு எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள், உன்னை மூன்றாவது குழந்தையாக பார்ப்பதாக கூறும் வசனம், சிம்பு மட்டுமல்ல ரசிகர்களும் எதிர்பாராத கவிதை. சிம்புவுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசும் த்ரிஷாவின் கடைசி நிமிட வசனம், அதனால் சிம்புவுக்கு ஏற்படும் தெளிவு, அதிலிருந்து உருவாகும் ‘காதம்பரி’ என்ற காதல் கதை என குறும்படம் முழுவதும் கவுதம் மேனனின் டச் உள்ளது.

கார்த்திக், ஜெஸ்ஸி என இரண்டு கேரக்டர்களுக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பின்னணி இசையால் உயிர் கொடுத்திருக்கின்றார். மொத்தத்தில் ‘விண்ணை தாண்டி வருவாயோ 2’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்துவிட்டது இந்த சிம்புவின் ‘கார்த்திக் டயல் செய்த எண்”.