வெள்ளி விழா கண்ட விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன்

20

ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களின் 100வது படம் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால் விஜயகாந்தின், 100வது படமான, கேப்டன் பிரபாகரன் வெள்ளி விழா கண்டது. அதுவும் 100 படங்களுமே தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இப்படத்திற்கு பின், கேப்டன் அடைமொழி விஜயகாந்திற்கு கிடைத்தது.

ஆட்டோ சங்கர் செய்த கொலைகளை மையமாக வைத்து புலன் விசாரணை படத்தை உருவாக்கிய, ஆர்.கே.செல்வமணி சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை எடுத்து, கேப்டன் பிரபாகரன் படத்தை உருவாக்கினார். காடுகளுக்குள் அலைந்து திரிந்து ஒளிப்பதிவு செய்திருந்தார் ராஜராஜன். வழக்கம் போல லியாகத் அலிகான் வசனம், பட்டையை கிளப்பியது. வீரப்பன் போன்ற கதாபாத்திரத்தை, மன்சூர் அலிகான் ஏற்று, வில்லத்தனத்தைக் காட்டியிருந்தார். அவரின் குரல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பதுடன், பல்வேறு சமூக விரோத செயல்களையும் செய்து வரும், மன்சூர் அலிகானை, மாநில காவல் துறையால் பிடிக்க முடியவில்லை. அவரை பிடிக்கும் பொறுப்பு விஜயகாந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின், மன்சூர் அலிகானை உயிருடன் பிடிக்கிறார். ஆனால், ஊழல் அதிகாரிகளான காவல் துறை ஆணையரும், கலெக்டரும், மன்சூர் அலிகானை சுட்டுக் கொன்று விடுகின்றனர். இதையடுத்து, விஜயகாந்த் என்ன செய்தார் என்பது தான், படத்தின் முடிவு.

இளையராஜா இசையில், பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா ஆகிய இரண்டு பாடல்கள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. சாதனை படைத்தார், கேப்டன் பிரபாகரன்!

Your Digital PR