இரட்டை சகோதரர்கள் ஆள்மாறாட்டம் செய்து பட்டைய கிளப்பிய எங்க வீட்டு பிள்ளை

பார்வையாளர்களின் விமர்சனம் இரட்டை சகோதரர்கள் ஆள்மாறாட்டம் செய்து பட்டைய கிளப்பிய எங்க வீட்டு பிள்ளை 0.00/5.00


நாடோடி மன்னன் படத்தின் வசூலைத் தொடர்ந்து 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை படம் அந்த வசூலையும் முறியடித்தது. ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும், பழைய கதை தான்… ஆனால், அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது.

ராமுவை கோழையாக வளர்த்து அவரின் சொத்துக்களை மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார். நம்பியாரின் கொடுமை தாங்காமல், ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார். மறுபுறம் இளங்கோ என்பவர், வீரனாக வளர்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் இடம் மாறுகின்றனர். இதனால் நிகழும் மாற்றாங்களே கதைகளம்.

‘ராமு, இளங்கோ’ என, இரு கதாபாத்திரங்களிலும், எம்.ஜி.ஆர்., புகுந்து விளையாடி இருப்பார். அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் அடி வாங்கும் போது, ‘அட, எம்.ஜி.ஆரா இது’ என விமர்சகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

தெலுங்கில், என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான, ராமுடு பீமுடு படத்தின், ‘ரீமேக்’ தான் இப்படம். ஹிந்தியில், திலிப்குமார் நடிப்பில், ராம் அவுர் ஷ்யாம் என வெளியானது. எங்க வீட்டுப்பிள்ளை படப்பிடிப்பு, 45 நாட்களில் நிறைவடைந்தது. பட பூஜை போட்ட இரண்டே மாதத்தில் வெளியானது.

மாடிப்படியில் ஏறியும், இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கும் போது, ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…’ என்ற பாடல் இடம் பெறும்; இதற்காகவே, எத்தனை முறை வேண்டுமானாலும் எங்க வீட்டுப்பிள்ளை படத்தை பார்க்கலாம்.