இசையுலகில் தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மெலடி கிங் வி குமார்

38

தமிழ் திரையுலகில் எம் எஸ் விஸ்வநாதன், கே வி மஹாதேவன் என்ற இரண்டு ஜாம்பவான்கள் கோலோச்சியிருந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனிப் பாணியுடன் ஒரு இசை சாம்ராஜ்யத்ததை உருவாக்கி, பல ஆண்டுகள் பணிபுரிந்து எண்ணற்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான செவிக்கினிய கீதங்களை தந்தவர் இசை அமைப்பாளர் வி குமார். இவரது மனைவி திருமதி கே ஸ்வர்ணா, அவரும் ஒரு சிறந்த பின்னணிப் பாடகி ஆவார்.

“ஜானகி சபதம்” திரைப்படத்தில் வரும் “இளமைக் கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்”, “மக்கள் குரல்” திரைப்படத்தில் வரும் “வஞ்சிச் சிட்டு நெஞ்சைத் தொட்டு”,நல்ல பெண்மணி திரைப்படத்தில் வரும் “இனங்களிலே என்ன இனம் பெண் இனம்”, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” படத்தில் வரும் “கண்ணெல்லாம் உன் வண்ணம்”, “தூண்டில் மீன்” திரைப்படத்தில் வரும் “என்னோடு என்னென்னவோ ரகசியம்” போன்ற, தமிழ் திரையிசை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான பாடல்களை அழகான குரல்வளத்தால் தனது கணவரும், இசையமைப்பாளருமான வி குமார் இசையமைப்பில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.

இசை ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவயது குமாருக்கு தனது சகோதரிக்கு வீட்டிலேயே இசை பயற்சி கொடுக்கப்பட்டதை பார்க்க நேர்ந்த போது, இசை ஆர்வம் ஏற்பட்டு வயலின் மற்றும் ஆர்மோனியம் கற்க பயிற்சி எடுத்துக் கொண்டார்.

Your Digital PR

பதினேழு, பதினெட்டு வயதில் வாத்தியக் குழுவில் இணைந்து வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ஆரம்ப காலங்களில் ஓ.எம்.ஐ.ஏ விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், ராகினி ரெக்ரியேஷன் போன்ற குழுக்களின் நாடகங்களுக்கு இசையமைத்து வந்த வி குமாருக்கு, பிரபல தயாரிப்பாளர் ஏ கே வேலன்,கே பாலசந்;தரின் நாடகமான “நீர்க்குமிழி”யை திரைப்படமாக எடுக்க முற்பட்டபோதே, படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பையும் வி குமாரிடம் ஒப்படைத்தார். கே பாலசந்தருக்கு எப்படி அது முதல் படமோ, அதேபோல் வி குமாருக்கும் அதுவே முதல் படமும் ஆனது. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தது.

குறிப்பாக அந்த காலகட்டங்களில் வந்த கே பாலசந்தரின் பெரும்பாலான படங்களுக்கு வி குமாரே இசையமைத்து வந்தார் எனலாம். நீர்க்குமிழி, “நாணல்”, “மேஜர் சந்திரகாந்த்”, “எதிர் நீச்சல்”, “இரு கோடுகள்”, “பத்தாம் பசலி”, “நவக்கிரஹம்”,நூற்றுக்கு நூறு, “அரங்கேற்றம்”, “வெள்ளி விழா” என இந்த ஜோடியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. நினைவில் நின்றவள், “பொம்மலாட்டம்”, “ஆயிரம் பொய்”, “நிறைகுடம்” என இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கிய முக்தா பிலிம்ஸ் படங்களுக்கும் அருமையான பாடல்;களை அள்ளி வழங்கியிருக்கின்றார் இசையமைப்பாளர் வி குமார்.

ஏறக்குறைய 150 படங்கள் வரை இசையமைத்திருக்கும் வி குமாரின் தேனினும் இனிய எண்ணற்ற கீதங்களை இவர் இசையமைத்தது என்று தெரியாமலேயே வானொலியில் கேட்டு மகிழும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. எம் எஸ் வி காலத்திலேயே அவருக்கு இணையாக பல அற்புதமான பாடல்களை தந்த இந்த இசை வித்தகருக்கு சரியானதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற ஏக்கம் தமிழ் திரையிசை ரசிகர்களிடம் இன்றும் உண்டு என்பது திண்ணம்.

Your Digital PR