சொல்லாத காதலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் படுத்திய இதயம்

31

சொல்லாத காதலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம், இதயம்! புதிய இயக்குனர்களின் வருகை, சில நேரங்களில் தமிழ் திரையுலகை திருப்பி போட்டுவிடும். புதுமையான அவர்களின் இயக்கம், தமிழ் சினிமாவிற்கு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும். அப்படி வந்தவர் தான், இயக்குனர் கதிர்!

ஓவியக் கல்லுாரியில், முதுநிலை படித்து முடித்து ‘டைட்டில் டிசைனர்’ பணியாற்றிய கதிரின் இயக்கத்தில் வெளியான முதல் படம், இதயம். அதனால் தான் படத்தின் காட்சிகளில் கவிதை நிறைந்திருக்கும். கிராமத்திலிருந்து சென்னை வந்து, மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் முரளி, தன்னுடன் படிக்கும் ஹீராவைக் காதலிக்கிறார். ஆனால் தன் தாழ்வு மனப்பான்மையாலும், கூச்ச இயல்பாலும், காதலை அவரிடம் சொல்ல முடிவதில்லை.

படிப்பு முடித்து செல்லும் வரை, தன் காதலை அவர் சொல்வதில்லை. ஹீரா, இவரது காதலைப் புரிந்து கொள்ளும்போது முரளியிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை. கவிதை போல, படம் கொடுத்திருந்தார் கதிர்.

ஒருதலை காதலை சுமக்கும் கல்லுாரி மாணவராக, அந்த கதாபாத்திரமாகவே பொருந்தியிருந்தார், முரளி. அறிமுகமான முதல் படத்திலேயே, அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார் ஹீரா.

இப்படம் தான், கதிரும், இசையமைப்பாளர் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த, ஒரே திரைப்படம். ‘ஏப்ரல் மேயிலே, பொட்டு வைத்த ஒரு வட்டநிலா, ஓ பார்ட்டி நல்ல, பூங்கொடி தான் பூத்ததம்மா, இதயமே இதயமே…’ என, அனைத்து பாடல்களும், ஆண் குரல் வழியே தான் வெளிவந்து, இளைஞர்களின் தேசிய கீதமானது.

ரோஜா மலரோடு, காதலை இணைத்து கவிதை பேசியது, இதயம்!

Your Digital PR