முருகனுக்காக சிவனின் திருவிளையாடல் குறித்து விளக்கிக் கூறும் திருவிளையாடல்

15

நீரே, முக்கண் முதல்வனாயினும் ஆகுக… உமது நெற்றியில், ஒரு கண் காட்டிய போதிலும், உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும், குற்றம் குற்றமே எனும் வசனத்தை படிக்கும் போதே, உணர்ச்சி மேலிடுகிறதா… அது தான், வசனம்! கடந்த, 1965 முதல், பல ஆண்டுகள், திருவிளையாடல் படத்தின் ஒலிச்சித்திரம் கேட்காத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு, பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம்.

பழத்திற்காக சண்டை போட்டு, கோபமடைந்து செல்லும் முருகருக்கு, அவரின் தாய் பார்வதி, சிவனின் திருவிளையாடல் குறித்து, விளக்கிக் கூறி சமாதானப் படுத்துவதே கதை. இதற்காக திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 தொகுப்புகளில் இருந்து, நான்கு கதைகளை மட்டும் எடுத்து படத்தில் தொகுத்திருப்பர் இயக்குநர்.

சிவனாக, சிவாஜிகணேசன்; பார்வதியாக, சாவித்திரி நடித்திருப்பர். இப்படத்தின் இயக்குனர், ஏ.பி.நாகராஜன் தான் நக்கீரன் வேடத்தில் நடித்திருப்பார். ஹேமநாத பாகவதராக, டி.எஸ்.பாலையாவும்; தருமியாக நாகேஷும், நடிப்பில் பெரும் வெற்றிக்கொடியை நாட்டியிருப்பர். கண்ணதாசனின் வரிகளுக்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆர்.மகாலிங்கம், டி.எம்.சவுந்தரராஜன் ஆகியோர் குரல்களில், பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா, இன்றொறு நாள் போதுமா, இசைத்தமிழ் நீ செய்த, பாட்டும் நானே… என்பது உட்பட, படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் முத்துகள்! பகுத்தறிவு என்ற பெயரில், ஹிந்துக்களுக்கு எதிராக பிரசாரம் தீவிரமாக நடந்தபோது, திருவிளையாடல் வெளிவந்து, இது ஆன்மிக மண் என்பதை, அழுத்தம் திருத்தமாக பறைசாற்றியப் படம்