தமிழில் முதன் முதலில் வெளிவந்த முழுநீள காமெடிப்படம் சபாபதி


சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி. மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி. பூமியில் வாழும் எந்த ஜீவராசிகளுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்திருக்கும் விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு. அப்படி ஒரு உன்னதமான சிரிப்பை மையப்படுத்தி முதன்முதலாக முழுநீள சிரிப்பு படம் வெளிவந்தவை சபாபதி.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய, சபாபதி என்ற நாடகம், அதே பெயரில் திரைப்படமானது. ஏ.டி.கிருஷ்ணசாமியும், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் இணைந்து, இயக்கினர். தமிழில் வெளிவந்த முதல், முழுநீள காமெடி படம். பள்ளிக்கூட குறும்பு காட்சிகளுக்கும், உடல் மொழிக்கும் ஆத்திச்சூடி எழுதியதே, சபாபதி படம் தான் என்று கூறலாம்.

பணக்கார முதலாளிக்கு மகனான சபாபதி – டி.ஆர்.ராமச்சந்திரன், படிப்பில் மந்தம். அவருக்கு, படிக்கும் போதே, பத்மாவை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். தேர்வில் வெற்றி பெற்றால் தான் முதலிரவு என, கண்டிஷன் போடுகிறார் தந்தை. மனைவியை, மாமியார் வீட்டில் விட்டு விட்டு அவஸ்தைப்படுகிறார் சபாபதி. தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்த சபாபதி, மனைவியுடன் இணைந்தாரா… தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என்பது தான் மீதிக்கதை.

அன்றைய, லக்ஸ் சோப் விளம்பர மாடல் தான், இப்படத்தின் நாயகி பத்மா. படத்தில் மற்றொரு சபாபதியாக வரும், காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் செய்யும் காமெடி காட்சிகள், இன்றைய கவுண்டமணி – செந்தில் ரகம். இப்படத்தில் காளி – என்.ரத்தினத்திற்கு, 3,000 ரூபாய் சம்பளம். அப்போது, அதிக சம்பளம் வாங்கியவரின் பட்டியலில் இவர் தான் முதலிடம். நாயகனாக நடித்த, டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதம், 35 ரூபாய் தான்.

நாயகனுக்கு இணையான காமெடியன் வேடத்தில், இன்னொரு சபாபதியாக காளி என்.ரத்தினம். சி.டி.ராஜகாந்தத்தோடு இவர் செய்யும் காமெடி காட்சிகள், இன்னொரு என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் ரகம். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என, இப்போது பலர் சொல்வதை கேட்டிருப்போம். தன் நண்பர் ஸ்ரீனிவாசனின் வேலைக்காரர் நரசிம்மன் தான், வேலைக்கார சபாபதி பாத்திரத்திற்கு, ரோல்மாடல் என்பதை, பம்மல் சம்பந்தம் ஒரு முறை கூறியிருந்தார்.

சபாபதி நாடகமாக அரங்கேறிய போது, வேலைக்கார சபாபதியாக பம்மல் சம்பந்தம் நடித்தார். அதை பார்த்த காளி என்.ரத்தினம், இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் தான், நடிக்க வேண்டும் என்று விரும்ப, சபாபதி திரைப்படமாக உருவான போது, அவரது விருப்பம் நிறைவேறியது. முழு நீள காமெடி படமாக இருந்தாலும், அந்த காலத்தில், தமிழ் ஆசிரியர்களின் நிலை, பணக்காரர்களுக்கான மதிப்பு, ஏழை, பணக்காரன் வித்தியாசம், ஆங்கில மொழியின் தாக்கம் என, ஒரு சமூகப் படத்திற்கான அந்தஸ்து, இப்படத்திற்கு இருந்தது.