மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம்

12

போலீஸ் கதாபாத்திரம் என்றால், சிவாஜி கணேசனுக்கு, தங்கப்பதக்கம் என்பது போல ரஜினிக்கு, மூன்று முகம். போலீஸ் வேடத்தில் ‘இந்த அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொன்னால்…’ என, ரஜினி காட்டும் ஸ்டைல், மிகப்பிரபலம். ரஜினி முதன் முதலில் மூன்று வேடங்களில் நடித்த படம், மூன்று முகம்.

கண்டிப்பான போலீஸ் அதிகாரியான, அலெக்ஸ் பாண்டியன், சாராய கும்பலை வேட்டையாடுகிறார். அவர்கள், அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்கின்றனர். அவரின் இரட்டை குழந்தைகள், வெவ்வேறு இடங்களில் வளர்கின்றனர். வெளிநாட்டில் படித்து திரும்பும், அவரின் ஒரு மகன், அருண், ‘நான் அலெக்ஸ் பாண்டியனின் மறுபிறவி’ எனக் கூற, அதகளம் ஆரம்பமாகிறது.

இடையில், ஜானி என்ற இன்னொரு மகனாக, ரஜினி அறிமுகமாகி, இறுதியில் உயிர் தியாகம் செய்கிறார். பழிக்கு பழிக்கு என்ற வகையில் மறுபிறவி என்ற, ‘கான்செப்ட்டை’ புகுத்தி, வித்தியாசமாக கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில், அனைவருக்கும் பிடித்தது, அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரம் தான். இப்படத்திற்கு, ‘அலெக்ஸ் பாண்டியன்’ என, முதலில் தலைப்பு வைக்க திட்டமிட்டு இருந்தனராம். கன்னம் உப்பி, உலக உருண்டையை சுழற்றியபடி, செந்தாமரையிடம், அவர் பேசும் வசனம், வெகு பிரசித்தம்.

சங்கர் கணேஷ் இசையில் ‘நான் செய்த குறும்பு…’ உட்பட, அனைத்துப் பாடல்களும், வெற்றி பெற்றன. 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம். 1982ல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, இப்படத்திற்காக, ரஜினிக்கு கிடைத்தது. இந்த திரைப்படம், ஹிந்தியிலும், ரஜினி நடிப்பில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது.