பத்மஸ்ரீ புகழ் நடிகர் மோகன் லால்

6

மோகன்லால் விஸ்வநாதன் நாயர் என்ற இயற்பெயர் கொண்ட மோகன்லால் ஒரு புகழ் பெற்ற மலையாள திரைப்பட நடிகர். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” நான்கு முறையும், ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். இத்தகைய சிறப்புப் பெற்றுத் திகழும் மாபெரும் நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.

பிறப்பு:

மோகன்லால் அவர்கள், 1960 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்ட மாவட்டத்திலுள்ள இலந்தூர் என்ற இடத்தில் விஸ்வநாதன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

முடவன்முகளிலுள்ள எல்.பி பள்ளியில் தன்னுடைய ஆரம்ப கல்வியை தொடர்ந்த அவர், பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள மாடன் பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும் பொழுதே இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், பள்ளியில் அவ்வப்போது நடைபெற்ற நாடகங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிறகு “மகாத்மா காந்தி கல்லூரியில்” தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

திரைப்படத் துறையில் மோகன்லாலின் பங்கு:

1978 ஆம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மோகன்லால் அவர்களின் முதல் திரைப்படமான “திறநோட்டம்” பல காரணங்களால் ஒரு சில இடங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர், 1980ல் வெளியான “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது எனலாம்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த மோகன்லாலுக்கு, 1986ல் வெளிவந்த “டி.பி பாலகோபாலன் எம். ஏ” என்ற திரைப்படம் இவருக்கு “கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை” பெற்றுத் தந்தது. ‘ராஜாவின்டே மகன்’, ‘சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம்’, ‘காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட்’, ‘நாடோடிக்கட்டு’, ‘வரவேல்பு’, ‘சித்ரம்’, ‘தூவானத்தும்பிகள்’, ‘தாழ்வாரம்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கி மலையாளத் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்தார் என கூறலாம்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த மோகன்லாலுக்கு, 1989ஆம் ஆண்டு வெளிவந்த “கிரீடம்” திரைப்படம் இவருக்கு தேசியவிருதை பெற்றுத்தந்தது. பின்னர், 1991ஆம் ஆண்டு வெளிவந்த “பாரதம்” என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பைப் பாராட்டி மீண்டும் ஒரு “தேசிய விருது” தேடிவந்தது.

இதைத் தொடர்ந்து ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்’, ‘முதுனம்’, ‘ஸ்படிகம்’, ‘மணிசித்திரத்தாழ்’, ‘கலாபானி’, ‘கண்மடம்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, மலையாளத் திரைப்பட உலகின் மாபெரும் கதாநாயகனாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1999 ஆம் ஆண்டு, ஷஜ்ஜி என் கருன் இயக்கத்தில் வெளிவந்த “வானபிரஸ்தம்” திரைப்படம் சிறந்த நடிகருக்கான மற்றுமொரு “தேசிய விருதை” இவருக்கு பெற்றுத்தந்தது.

பிறமொழி திரைப்படங்களில் மோகன்லாலின் பங்கு:

மோகன்லால், மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், தன்னுடைய முதல் பாலிவுட் படமான “கம்பெனியில்” நடித்து, இந்தி மொழியில் முத்திரைப் பதித்தார்.

‘கோபுர வாசலிலே’ (தமிழ்), ‘இருவர்’ (தமிழ்), ‘உன்னைப்போல் ஒருவன்’ (தமிழ்), ‘காண்டீவம்’ (தெலுங்கு), ‘லவ்’ (கன்னடா), ‘ராம் கோபால் வர்மா கி ஆக்’ (இந்தி), ‘தேஜ்’ (இந்தி) போன்றவை இவருடைய பிறமொழி படங்களாகும்.