தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படத்தில் நடித்தவர் நடிகை அஞ்சலி தேவி

17

1950 களில் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத் தொழிலில் ஈடுபட சென்னைக்கு 1940களில் குடிபெயர்ந்தார்.

1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது ‘கஷ்ட ஜீவி’ என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை.

அதன் பின்னரே நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான ‘கொல்ல பாமா’ படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலிதேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார்.

முதல் கலர் படத்தில் நடித்தவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலிதேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை…-இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.

1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான ‘லவகுசா’வில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.

கனவுக்கன்னி

50 களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கணவணே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அசத்திப்போட்டது என்றால் அதில் மிகையில்லை.

அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை ‘ஸவர்ண சுந்தரி’ மற்றும் ‘அனார்கலி’ போன்றவை. இதில் ‘அனார்கலி’ அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.

ஒரு பக்கம் சொந்த தயாரிப்புகள், இன்னொரு பக்கம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்த அஞ்சலி, 50 மற்றும் 60 களில் திரையுலகின் அத்தனை பிரபலங்களுடன் நடித்தவர் . தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மூத்த கலைஞரான அஞ்சலிதேவியின் மறைவு ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றால் மிகையில்லை.