எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் கலக்கிய அடிமைப் பெண்

18

25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும், தன் தாயை மீட்கிறான்; மன்னரான தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை, மகன் பழிவாங்குகிறான் இதுவே படத்தின் கதை

1969ம் ஆண்டு வெளியான அடிமைப் பெண் படத்தின் கதை. நவீன தொழிற்நுட்பமும், திரைக்கதையில் மாற்றமும் செய்தால், பாகுபலி படம் தயார். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவருமே, இரட்டை வேடத்தில் நடித்த படம், அடிமைப் பெண். இப்படத்தின் படப்பிடிப்பில் தான், எம்.ஜி.ஆரின் அடையாளமாக உள்ள வெள்ளை தொப்பியை, அணிய துவங்கினார். பாடகர், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அறிமுகமானப் படம்.

ஜெய்ப்பூர், ஓகேனக்கல் நீர் வீழ்ச்சி, ராஜஸ்தான், ஊட்டி போன்ற இடங்களில், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. கே.வி.மகாதேவன் இசையில், ஆயிரம் நிலவே வா, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை… போன்ற பாடல்கள், படத்திற்கு இனிமை சேர்ந்தன.

கூன் விழுந்த வேங்கையன் கதாபாத்திரத்தில், எம்.ஜி.ஆரை கண்ட ரசிகர்கள் திகைத்தனர். பின், வீரனாக மாறி, எதிரிகளை வதைக்கும்போது, கூக்குரலிட்டு, மகிழ்ந்தனர். கதாநாயகியாகவும், பட்டத்து ராணி பவளவல்லி என, வில்லியாகவும், ஜெயலலிதா பட்டையை கிளப்பியிருப்பார்.

செங்கோடனாக, கொடிய வில்லன் பாத்திரத்தில், அசோகன் பிரமாதப்படுத்தியிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள், இன்றும் ஆச்சரியத்துடன் பேசப்படுகின்றன. எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது, அடிமைப்பெண். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, திரைக்கதை இருக்கும்.