நாகேஷிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த சர்வர் சுந்தரம்

பார்வையாளர்களின் விமர்சனம் நாகேஷிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த சர்வர் சுந்தரம் 0.00/5.00


சர்வர் சுந்தரம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாகேஷ் என்ற மாபெரும் கலைஞனுக்காக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய நாடகம் தான், சர்வர் சுந்தரம். இதை திரைப்படமாக்கும் உரிமையை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பெற்று, கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரை இயக்குனராக நியமித்தார்.

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் நாகேஷ், வயிற்றுக்காக, ஒரு ஓட்டலில சர்வராக வேலை பார்ப்பார். ஓட்டல் முதலாளியின் மகள் கே.ஆர்.விஜயாவை காதலிப்பார். ஆனால் நாகேஷின் நண்பன் முத்துராமனும், கே.ஆர்.விஜயாவும் காதலிப்பார்கள்.

முத்துராமனின் முயற்சியால், நாகேஷூக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும். மிக பிரபலமான பின் அனைத்தும் கிடைத்த நாகேஷூக்கு காதல் மட்டும் கிடைக்காது.

வாழ்க்கையில், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்காது; ஏதாவது குறை இருக்கும். அதை ஏற்று வாழ, பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான் சர்வர் சுந்தரம் படத்தின் கதையின் சாரம்.

நண்பனுக்காக காதலியை தியாகம் செய்ய தயாராகும், முத்துராமன் காதலுக்காக, அவரின் நண்பரிடம் நடிக்க வேண்டிய கட்டாயம் என, கே.ஆர்.விஜயாவுக்கு என இருவரும் அந்தந்த கதாபாத்திரங்களின் தேவையை கச்சிதமாக பூர்த்தி செய்திருப்பர். உடல்மொழி கலைஞன் நாகேஷூக்கு, இப்படம் பெரும் திருப்புமுனை.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் வாலி ஆகியோர் பாடல் எழுதியிருந்தனர். ‘அவளுக்கென்ன, சிலை எடுத்தான் இந்த சின்ன பெண்ணுக்கு…’ போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்றன.

படத்தில் கதாநாயகன் முக்கியமில்லை, கதையை தான் நேசிக்கின்றனர், என திரையுலகினருக்கு உணர்த்திய படம் சர்வர் சுந்தரம்.