கே.எஸ்.ரவிக்குமாருக்கு இயக்குனராக அந்தஸ்து கொடுத்த சேரன் பாண்டியன்

56

ஒரு படத்தின் வெற்றிக்கு தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கம் இருந்தால் போதும் பட்ஜெட் முக்கியமில்லை என்பதை அறிவுறுத்திய படம், சேரன் பாண்டியன். 33 லட்சம் ரூபாய் செலவில், இப்படம் உருவானது. படம், வசூல் மழையை கொட்டியது.

புரியாத புதிர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்தது, இப்படம் தான். ஜாதி மீது பற்றுள்ள, கிராமத்தின் தலைவரான விஜயகுமார், அவரது தம்பியான சரத்குமாரை வெறுக்கிறார். விஜயகுமாரின் தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட, தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு பிறந்தவர் சரத்குமார் என்பதால், வெறுக்கிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் உறவினரான ஆனந்த்பாபு, இந்தக் கிராமத்திற்கு வருகிறார். இவரும், விஜயகுமாரின் மகளான, ஸ்ரீஜாவும் காதலிக்கின்றனர். இவர்களின் காதல் என்ன ஆனது? விஜயகுமார், தன் தம்பியை புரிந்துகொண்டாரா என்பது கிளைமேக்ஸ்.

இயக்குனராக வேண்டும் என, ஆர்.பி.சவுத்ரியிடம் கதை சொல்ல போன சவுந்தர்யன், இப்படத்தில் இசையமைப்பாளர் ஆனார்! கண்கள் ஒன்றாக, காதல் கடிதம், சம்பா நாத்து, வா வா எந்தன், கொடியும், சின்னத் தங்கம், எதிர்வீட்டு, ஊருவிட்டு ஊருவந்து… என, அனைத்து பாடல்களும், பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தின் வெற்றிக்கு பின், கே.எஸ்.ரவிக்குமார் – சரத்குமார் கூட்டணியில் நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம் படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன. சேரன் பாண்டியன் படம் தெலுங்கில், பால ராமகிரிஷ்ணலு; ஹிந்தியில், சவுடெல்லா என ரீமேக் செய்யப்பட்டது.

Your Digital PR