புதுமுகங்களுடன் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அறிமுகமான பொம்மை படம்


தமிழ் சினிமாவில் 1964ம் ஆண்டு வெளியான படம் பொம்மை. நடிகர்களாக எஸ்.பாலசந்தர், வி.எஸ்.ராகவன் மற்றும் விஜயலெட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு மற்றும் இயக்கம் என அனைத்துப் பொறுப்பையும் வீணை எஸ்.பாலசந்தர் ஏற்றார். படம், ஹாலிவுட் இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக்-கின் சபடாஜ் என்ற படத்தின் தழுவல் ஆகும்.

ஒரே நாளில் நடக்கும் கதைக்களம். ஒரு பொம்மைக்குள் இருக்கும் வெடிகுண்டு, பலர் கைமாறி செல்கிறது என்பது தான், படத்தின் ஒரு வரி கதை. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ‘ஓபன் சஸ்பென்ஸ்’ எனும் திரைக்கதை தான். பொம்மையில் வெடிகுண்டு இருப்பது, ரசிகர்களுக்கு தெரியும்; கதாபாத்திரங்களுக்கு தெரியாது. அதனால் ரசிகர்கள், அப்படத்தோடு ஒன்றிணைந்தனர்.

இசையமைப்பிலும், வீணை எஸ்.பாலசந்தர் வித்தியாசம் காட்டியிருந்தார். இப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும், புதுமுகங்கள். பொம்மை படத்துடன், அன்றைய பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகின; ஆனால் பொம்மை தான் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற, ‘நீயும் பொம்மை நானும் பொம்மை…’ என்ற பாடல் வழியே, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.

பொம்மை படத்தின் இறுதிக் காட்சியில், படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும், ரசிகர்களிடம், இயக்குனர் அறிமுகப்படுத்துகிறார்; இதுவும், புதுமையான முயற்சி. ‘வித்தியாசமான கதைகளம் நிறைய இருக்கிறது’ என தமிழ் திரையுலகினருக்கு, வீணை எஸ்.பாலசந்தர் அறிவுறுத்திய படம் பொம்மை!