கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசிப்படம் மூன்றாம் பிறை

31

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த 25 படங்களில் பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறைக்கு நிச்சயம் இடம் உண்டு. மனமுதிர்ச்சி அடைந்த அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே பூக்கும் மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையும் தான் படம்.

சீனுவாக கமலும், விஜியாக, ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அவர்களுடன் நடித்த ‘சுப்பிரமணி’ எனும் நாயும் கூட, நம் அன்பை பெற்றிருக்கும். ஊட்டி அருகே உள்ள கெட்டி எனுமிடத்தில் தான், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பாலுமகேந்திராவின் கேமராவில் மட்டும், ஊட்டி இன்னும் அழகாகத் தெரியும்.

சிறந்த நடிகர் விருது, கமலுக்கும்; ஒளிப்பதிவாளர் விருது, பாலுமகேந்திராவிற்கும் கிடைத்தன. ஆனால் சிறந்த நடிகை விருது, ஸ்ரீதேவிக்கு வழக்கப்படவில்லை; இது, பெரும் சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியது!

வணிகத்திற்காக மட்டும் இப்படத்தில் சேர்க்கப்பட்ட ‘பொன்மேனி உருகுதே…’ பாடல் மட்டும் திருஷ்டி பொட்டு! இப்படம், 330 நாட்கள் மேல் ஓடி, பெரும் வெற்றியைப் பெற்றது. வசந்த கோகிலா எனும் பெயரில், தெலுங்கில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 1983ல், பாலுமகேந்திராவே, கமல், ஸ்ரீதேவி நடிப்பில், சந்த்மா என்ற தலைப்பில், ஹிந்தியில் இயக்கினார்.

கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசி திரைப்படம் இது. அவரின் ‘கண்ணே கலைமானே…’ பாடலை கேட்காத செவிகள், தமிழகத்தில் இல்லை; கேட்காதவை செவிகளே இல்லை! உயிரில்லா இசைக்கருவிகள் வாயிலாக, உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியிருந்தார் இளையராஜா.

படத்தின் ‘கிளைமேக்ஸ்’ முடிந்த பின்னும் பலர் திரையரங்கில் இருந்து வெளியேறாமல், கனத்த மனதுடன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அங்கு நிமிர்ந்து நின்றார், பாலுமகேந்திரா!