க/பெ.ரணசிங்கம் – விமர்சனம்

27

க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி பாராட்டுக்குரியவர்.

துபாயில் இறந்து போன கணவர் ரணசிங்கம் உடலை இந்தியா கொண்டுவர, சட்டச் சிக்கல்களை பத்து மாதங்களாக எதிர் கொண்டபடி இருக்கிறார் மனைவி அரிய நாச்சி. உடல் வருகிறபாடாக தெரியவில்லை.

அதே நேரம் நடிகை ஸ்ரீ தேவி துபாயில் இறந்து போகிறார். அவரது உடல் 72மணி நேரங்களுக்குள் இந்தியா வந்தடைந்து, அரசு மரியாதையுடன் அடக்கமும் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு சம்பவங்களையும் துல்லியமாக திரைக்கதையில் பொட்டில் அடித்த மாதிரி கோர்த்திருக்கிறார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் சீமைக் கருவேலங்காடுகளால் எப்படி ஏற்படுகிறது? விவசாயம் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் என்ன? – என்பதையும் திரைக்கதை பதிவு செய்கிறது.

”அதிகாரத்தோட உச்சாணிக் கொம்புல இருக்குறவங்களுக்கு நாம அடிபட்டதோட வலியை கொஞ்சம் கூட குறையாம அப்படியே புரியவைக்கணும்” – என்பது போன்ற கூர்மையான வசனங்கள் படம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன. சிவப்புச் சட்டையும், செங்கொடியும் படத்தினூடாக இழைந்து வருகின்றன.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் பவானி ஸ்ரீ ஆகியோர் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எல்லாமும் இருந்தாலும் மிகைப்படுத்தல் படத்தில் பல இடங்களில் ஒன்ற விடாமல் செய்கிறது. உதாரணமாக பிரதமர் மோடி வரும் இறுதிக் காட்சி. அதீதமான கற்பனை. ஆனால் படத்திலும் கடைசிவரை நம்ம ஜி வாயிலே வடை சுட்டபடி தானிருக்கிறார்.

அதே போல படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன.

* ரண சிங்கம் மக்களின் உரிமைக்காக, அவர்களை ஒன்று திரட்டிப் போராடும் போராட்டக்காரர். தன் பிறந்த மண்ணை மதிப்பவர்.

‘விவசாயம் செய்யுங்கள்’ என்று அதை வறுமை காரணமாக விட்டுவிட முடிவு செய்பவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்பவர்.

ஒரு போராட்டத்திற்கு மக்களை அழைத்து, அவர்கள் வர மறுத்தவுடன் ஏன் சொந்த மண்ணைத் துறந்து துபாய் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார்?

இது அவரது இயல்பிற்கு மாறானது அல்லவா?

* ரணசிங்கம் மக்களின் குடியுரிமை குறித்து நன்றாக அறிந்தவர். ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் அவருக்கு அவசரமாகக் கல்யாணம் நடக்கிறது. அடுத்த நாள் காலை புது மனைவியை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டரிடம் மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த அளவிற்கு விவரமானவர், தன்னுடைய திருமணத்தை பதிவு செய்து வைக்க மாட்டாரா? தன்னுடைய பாஸ்போர்ட்டில் மனைவி பெயரை பதிவு செய்ய மாட்டாரா?

* வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவர்களது பிணத்தை திருமணப் பதிவு சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே இந்தியா கொண்டுவர முடியுமா? அவரது வேறு ஆவணங்களை வைத்து கொண்டு வர இயலாதா?

* கணவருடைய உடலை இந்தியா கொண்டு வர முயற்சி செய்யும் மனைவியை அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி நடுரோட்டில் நிறுத்தி அச்சுறுத்துவாரா? அந்தப் பெண்ணிடம் அவருக்கு எந்த முன்விரோதமும் இல்லாத சூழலில் அவர் ஏன் அப்படி நடந்து கொள்ள வேண்டும்?

* மனித உரிமைகள் ஆணையம் என்று ஒன்று படத்தில் இல்லாமலே போவது ஏன்?

கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தரமான படங்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை என்ற அளவில் இந்தப் படத்தை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

– இரா.குண அமுதன்.