ஒரே இரவில் திரைக்கதை எழுதி முடித்து தயாரான இன்று போய் நாளை வா!

14

ரகு தாத்தா இல்லை ரஹ தாத்தா – இந்த வசனத்தை படித்ததும், சிரிப்பு வருகிறது என்றால் நீங்கள் 80களின் சினிமா ரசிகர். இன்று போய் நாளை வா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும், கே.பாக்யராஜ். இப்படத்தின் திரைக்கதையை, ஒரே இரவில் எழுதி முடித்தாராம்.

ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்தால் என்னென்ன நடக்கும் என்பதே, படத்தின் ஒரு வரி சிந்தனை. இதை, நகைச்சுவை பட்டாசு அள்ளி வீசி, திரைக்கதை அமைத்திருப்பார், கே.பாக்யராஜ். பாக்யராஜ், பழனிசாமி, ராம்லி ஆகிய மூவரும், ராதிகாவை காதலிக்க, அவரது வீட்டுக்குள் வெவ்வேறு உத்திகளுடன் நுழைகின்றனர்.

பெண்ணின் அப்பாவிடம், ஒருவர் ஹிந்தி கற்றுக் கொள்கிறார். மற்றொருவர், பெண்ணின் தாத்தாவிடம் குஸ்தி பயிற்சி செய்கிறார். மூன்றாவது நபர், பெண்ணின் வீட்டிற்கு எடுபிடி வேலை செய்கிறார். அந்த வீட்டிற்குள் நடக்கும் காமெடி களேபரங்கள், தியேட்டரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

கதையின் வழியே காமெடி காட்சிகள் இடம் பெற்றிருக்கும். வசன ஜாலங்களோ, இரட்டை அர்த்தங்களோ இல்லாமல், காமெடி தர்பார் அரங்கேறியது.இந்தப் படத்தின் மூலமாக, முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்தார். பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் அசத்தியிருப்பார்.

எத்தனை முறை வேண்டுமானாலும், குடும்பத்தோடு இப்படத்தை ரசிக்கலாம். அதனால் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களிடம், பாக்யராஜ், ‘இன்று போய் நாளை வா’ என்றார்; அவர்களும் வந்துகொண்டே இருந்தனர்.