வில்லன் கதாநாயகனாக ரஜினி, கமல் மாறி நடித்த மூன்று முடிச்சு

25

கடந்த 1974ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகிய ஓ சீத கதா படம், 1975ல், மலையாளத்தில் பி. பாஸ்கரன் இயக்கத்தில் மாட்டாரு சீதா எனும் பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழில் அந்த கதையை, கே.பாலசந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு என ‘ரீமேக்’ ஆனது.

மாட்டாரு சீதா படத்தில், கமல் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்தை, தமிழில் ரஜினி நடித்தார். நண்பர்களான கமலும், ரஜினியும் ஸ்ரீதேவியை விரும்புவர். ஆனால் அவர் கமலை காதலிப்பார். கமலின் மரணத்திற்கு, ரஜினி காரணமாக இருப்பார். ரஜினியின் தந்தை, என்.விஸ்வநாத்தை, ஸ்ரீதேவி திருமணம் செய்து கொள்வார். இப்போது ரஜினிக்கு, அம்மாவாக ஸ்ரீதேவி ஆவார். அதன் பின் நடக்கும் அதகளம் தான் திரைக்கதை.

இப்படத்தில் நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு, 13 வயது. அவர் ரஜினியைப் பார்த்து, ‘போடா கண்ணா… போ’ என ‘பஞ்ச்’ பேசும்போது எல்லாம், தியேட்டரில் கைத்தட்டல் பறக்கும். இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்தில் ரஜினிக்கு, ‘வசந்தகால நதிகளிலே…’ பாடலின் முடிவில், குரல் கொடுத்திருப்பார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் – கே.பாலசந்தர் கூட்டணி, இப்படத்திலும் நமக்கு காலத்தால் அழியாப் பாடல்களை கொடுத்தன. இப்படத்தில், கமல் வசிக்கும் வீடு அவரின் சொந்த வீடாகும். ரஜினியின் மனசாட்சியாக, அவரது நண்பர், இயக்குனர் நட்ராஜ் நடித்திருப்பார்.

பிரபல இயக்குனர்கள் மிருணாள் சென் மற்றும் சத்யஜித் ரே படங்களில் தொடர்ந்து நடித்து வந்த, என்.விஸ்வநாத், இப்படத்தில் கத்திமேல் நடக்கும் கதாபாத்திரத்தை, அனாயசமாக செய்திருப்பார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இப்படம், பெரும் வெற்றியை பெற்றது.