அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவிய சினிமா பிரபலங்கள் !

12

இன்று திரைப்பிரபலங்கள், சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில், அரசியல் என பல துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மிக முக்கியமாக அரசியலில் அதிக திரைப்பிரபலங்கள் நுழைகிறார்கள். ஆனால், நுழைந்த வேகத்திலேயே கட்சி தாவலும் ஏற்படுகிறது.

இப்படி, ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு அடிக்கடி தாவிய பிரபலங்களை பற்றியே இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

குஷ்பூ

2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.  2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு காங்கிரஸ்லிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாக்யராஜ்

துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார்.

இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார்.

நெப்போலியன்

இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

பின்பு, அக்கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விலகி கடந்த 2014ல் பாஜகவில் இணைந்தார்.

விஜயகுமார்

இவர் கடந்த 2006ல்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த 2016ல் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருச்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

டி.ராஜேந்தர்

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

அருண்பாண்டியன்

தேமுதிகவில் தன் அரசியல் பயணத்தை தொடங்கி அங்கு ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த 2016ல் அதிமுகவில் இணைந்தார்.

சரத்குமார்

1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.

31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சரத்குமார் ஆவார்.

எஸ்.வி.சேகர்

2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது பாஜகவில் உள்ளார்.