க்ரைம் த்ரில்லரில் இறுதிவரை ரசிகர்களை பயமுறுத்திய அதே கண்கள் படம்

பார்வையாளர்களின் விமர்சனம் க்ரைம் த்ரில்லரில் இறுதிவரை ரசிகர்களை பயமுறுத்திய அதே கண்கள் படம் 0.00/5.00

பொதுவாக க்ரைம் த்ரில்லர் படம் என்றால் படத்தின் இடைவெளியிலோ அல்லது படத்தின் இடையிலோ படத்தின் வில்லன் யார் என்பதை அறிவித்து விடுவார்கள் என்பர் பட வல்லுநர்கள். ஆனால் படத்தின் இறுதிவரை கொலைகளுக்கான காரணம் என்ன? யார் வில்லன் என்ற கேள்வியோடு படத்தை நகர்த்தி ரசிகர்களை ஆச்சரியமடைச் செய்த படம் அதே கண்கள்.

படம் துவங்கும்போது ‘ரசிகர்கள், இப்படத்தின் முடிவை புதிதாக படம் பார்க்க வரும் யாரிடமும் தயவுசெய்து சொல்ல வேண்டாம்…’ என அறிவித்தனர். ஏனெனில், அந்த காட்சி தான் படத்தை தாங்கி நிற்கும். ஹாலிவுட் இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய திகில் திரைப்படங்கள், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றன. அவரது படங்கள் போன்று, தமிழில் திகில் படத்தை தயாரிக்க வேண்டும் என, ஏ.வி.எம்., நிறுவனம் விரும்பியது.

படத்தில் எஸ்.ஏ.அசோகன் குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரர்களும் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுவர். அக்குடும்ப உறுப்பினரான காஞ்சனாவின் காதலர், ரவிசந்திரன், கொலைகாரனை கண்டுபிடிக்க முயற்சிப்பார். ‘இவர் தான் கொலைகாரன்’ என, ரசிகர்கள் நினைக்கும்போது, அந்த நபர் கொலை செய்யப்படுவார். இதனால் ரசிகர்கள், இறுதி காட்சி வரை, ‘சஸ்பென்ஸ்’ உடன் காத்திருந்தனர்.

வேதாவின் இசையில், ‘எத்தனை அழகு, 20 வயதினிலே, பூம் பூம் மாட்டுக்காரன், வா அருகில் வா…’ போன்ற பாடல்கள் தமிழகம் முழுவதும் பட்டைய கிளப்பியது. ஒரு காட்சியில் கொலைகாரனின் கண்களை மட்டும், ரவிசந்திரன் பார்த்துவிடுவார்.

இதையடுத்து, ‘யார் கொலைகாரன்’ என்பதை கண்டறிய, சந்தேகப்படும் நபர்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களது கண்களை மட்டும், ஹீரோ உற்று பார்ப்பார். அதே கண்களை கண்டுபிடிப்பார். அந்த கொலையாளி யார் என்றால்… படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!