சினிமாவில் உதவி இயக்குனர்களின் பங்கு

16

திரைப்படங்களில் உதவி மற்றும் இணைஇயக்குனர்களின் பங்கு மிக முக்கியமானது. கதை டிஸ்கஷன் என்கிற கதை உருவாக்கத்திலிருந்து ஷடே்டிங், எடிட்டிங், டப்பிங், ரீ_ரெக்கார்டிங், மிக்சிங், என அத்தனை வேலைகளுக்கும் அவர்கள் மிகவும் தேவையான நபராக இருப்பார்கள்.

உதவி இயக்குனர்களின் சம்பளம் என்று பார்த்தால், ஒரு படத்திற்கு அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும் சொற்பமானது.

ஒரு தயாரிப்பு உதவியாளர் (புரொடக்ஷன் பாய்) சம்பாதிக்கும் அளவிற்குக்கூட உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கிடையாது.

உதவி இயக்குனர்கள் சம்பளம் வாங்கவேண்டுமென்றால் அவர்களுடைய பாட்டியோ, தாத்தாவோ சாகவேண்டும் என்று வேடிக்கையாக சொல்வார்கள். அதாவது ‘‘சார் என் பாட்டி இறந்து போய்ட்டாங்க ஊருக்கு போகணும் ஒரு ரெண்டாயிரம் ரூபா தர்றீங்களான்னு கேட்டுக்கேட்டு வாங்கவேண்டிய சூழல்தான் உதவி இயக்குனர்களோட நிலை.

எதிர்காலத்தில் இயக்குனர் ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கைதான் அவர்களுடைய சம்பளம்.

தமிழ் : அப்படின்னா அசிஸ்டெண்ட் டைரக்டர்களோட நிலைமை ரொம்ப கஷ்டம்னு சொல்லுங்க. சரி.. அதோ ஒருத்தர் கையில பேரு வச்சிக்கிட்டு அந்த நடிகருக்கு வசனம் சொல்லியிருக்கிறாரே அவர் யாரு?

அவர்தான் முதல் இணைஇயக்குனர் _ ஒரு படத்திற்கு இரண்டு இணை இயக்குனர்கள் நான்கு உதவிஇயக்குனர்கள் இருப்பாங்கன்னு சொன்னேனில்-லையா? அதுல முதல் இணைஇயக்குநரோட வேலை வசனம் சொல்லிக் கொடுக்கறது.

அதாவது அன்றைக்கு என்ன காட்சி எடுக்கப் போகிறாங்களோ அந்த காட்சியோட தன்மை… அதில நடிக்கிற நடிகரோட உணர்வு (எமோஷனல்) வசன உச்சரிப்பின் (மாடுலேஷன்) ஏற்ற இறக்கம் இதையெல்லாம் கவனிக்கிறவர் அவர்தான்.

ஒரு சீன்ல அந்த நடிகர் பேசவேண்டிய வசனத்தைக் கொடுத்து அவர் அதை எப்படி பேசி நடிக்கிறாரு.. அதுல அந்த காட்சியின் தன்மையும், எமோஷனலும் சரியா வருதான்னு பார்ப்பாரு.

அதே மாதிரி பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் எழுத படிக்க ஏன், பேசக்கூடாது தெரியாதுங்கிறதால அந்த இணைஇயக்குனர் அவங்க பேசவேண்டிய வசனத்தை பாவத்தோட, ஏற்ற இறக்கத்தோட தமிழ்ல பேச.. அதை அவங்க அந்த காட்சியில எப்படி நடிக்கணும்னு டைரக்டர் சொல்லிக்கொடுத்திடுவாரு.

முதல் இணைஇயக்குனர்கள் இப்படி வசனம் சொல்லிக் கொடுக்கிறது மட்டுமில்லாம டைரக்டர் வர முடியாத சூழல்கள்ல டைரக்ஷனும் பண்ணுவாங்க… அதே மாதிரி பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் எடுக்கும்போது பெரும்பாலும் இயக்குனர்களுக்கு வேலை இருக்காது என்பதால் முதல் இணைஇயக்குனர்களேகூட அந்த சண்டை, மற்றும் பாடல் காட்சிகளை அருகிலிருந்து கவனத்தோடு படம்பிடிப்பார்கள்.

தமிழ் : அப்படியா? சரி அவருக்கு பக்கத்துல இன்னொரு பேடு வச்சிக்கிட்டு நிற்கிறாரே.. அவரும் இணைஇயக்குனர்தானா? அவருக்கு என்ன வேலை?

ஆமாம் அவரும் இணைஇயக்குனர்தான். அதாவது இரண்டாவது இணைஇயக்குனர். அவரோட வேலை ஆக்ஷன் கண்டினியூட்டி பார்க்கிறது.

அதாவது நான் முன்பு சொன்ன பார்வை நடிப்பு காட்சியின் தன்மை என ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடையே மிகச் சரியாக, பொறுத்தமாக இருப்பதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அவர்களோடது.

தமிழ் : புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?

சரி… சொல்றேன். அதாவது ஆக்ஷன் கண்டினியூட்டிங்கிறது ஒரு படத்திற்கு மிக முக்கியமான வேலை. அதை விளக்கமா சொல்லணும்னா.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு காட்சிகளின் முதல் ஷாட் பெரும்பாலும் மாஸ்டர் ஷாட்டாக அதாவது லாங் மிட் ஷாட்டாகவோ _ லாங் ஷாட்டாகவோ இருக்கும். அந்த ஷாட்டில் ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை நடிகர்னு நான்கு அல்லது மூன்று நடிகர்கள் பிரேமிற்குள் வருவது நடிப்பது என ஷாட் நீளமாக இருக்கும். அப்படி இருக்கும் ஷாட் ஏதோ ஒரு இடத்தில் கட் ஆகும்.

அந்த ஆக்ஷனை… பார்வையை அதனுடைய கன்டினியூட்டியை துள்ளியமாக கவனிக்கிறவர்தான் இரண்டாவது இணைஇயக்குனர்.

அதற்காக அவர் சில குறியீடுகளை தனது நோட்டில் குறித்துக் கொள்வார். அதாவது < இப்படி குறியீடு இருந்தால் வலது பக்க பார்வை என்று பொருள் < இப்படி குறியீடு இருந்தால் அந்த குறிப்பிட்ட நடிகர் இடது பக்கமாக பார்த்தார் என்று பொருள் ஸ் இப்படி குறியீடு இருந்தார் நேரே பார்த்தார் என்று பொருள்.

இதேபோல் ஒரு காட்சியில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் ஒவ்வொருவரும் வசனம் பேசும்போது அவர்களின் பொசிஷன், பார்வை கைகால் அசைவு எல்லாவற்றையும் துள்ளியமாக குறித்து வைத்தோ அல்லது மனதிற்குள் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த ஷாட் எடுக்கும்போது மிகச் சரியாக அவரின் நிலையை மற்றும் பார்வையை சொல்வார்கள்.

< = கை மேலே தலையை தடவிவிட்டு எடுத்தார்.

தமிழ் : இவ்வளவு வேலை இருக்கா? சரி உதவி இயக்குனர்களுக்கு என்னென்ன வேலை?

நாலு உதவி இயக்குனர்கள்ல முதல் உதவி இயக்குனர் ஓ.கே.டேக்ஸ் அதாவது எடுத்து காட்சியில் எந்தெந்த டேக்ஸ் ஓ.கே.ஆனது. எந்தெந்த டேக் ரிஜெக்ட் ஆனது என்பதை துள்ளியமாக குறித்து வைப்பார். இந்த ஓ.கே.டேக்ஸ் ரிப்போர்ட் என்பது எடிட்டிங்கிற்கு மிக முக்கியமானது.

தமிழ் : அப்ப அந்த உதவி இயக்குனர் வேலை முக்கியமான வேலைன்னு சொல்லுங்க. ஆமா அதோ அந்த நடிகையோட முகத்தைப் பார்த்து பார்த்து நோட்ல ஏதோ எழுதறாரே அவர் யாரு?

அவர்தான் இரண்டாவது உதவி இயக்குனர். அவரோட வேலை என்ன தெரியுமா? காஸ்ட்யூம் கண்ட்னியூட்டி பார்க்கிறது.

அதாவது ஒரு காட்சியில ஒரு நடிகை எந்த நிறத்துல, வடிவத்துல டிரஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க அவங்களோட காதுல எந்த டிசைன் கம்மல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. மூக்குத்தி எந்த மாதிரி டிசைன்ல இருந்தது. அவங்க வச்சிருந்த பொட்டு எந்த நிறம். அது மீடியம் சைஸ் பொட்டா, பெரிய பொட்டா, சிறிய பொட்டா… ஏர்ஸ்டைல் எப்படியிருந்தது. கையில எத்தனை வளையல் போட்டிருந்தாங்க. மோதிரம் எத்தனை, என்ன மாதிரி டிசைன்ல மோதிரம் இருந்தது. கழுத்துல செயின் போட்டிருந்தா அதோட டிசைன் என்ன? இதையெல்லாம் துள்ளியமா கவனிச்சு குறிச்சு வச்சிருப்பாரு.

இது எதுக்குன்னா… ஒரு காட்சி சென்னையில எடுக்கறாங்கன்னு வச்சிப்போம். அதோட தொடர்ச்சி இங்கே எடுக்க முடியாமப் போகலாம். அப்படியில்லாம இந்த காட்சியோட தொடர்ச்சி காட்சி வேறு ஊர்ல வேறு நாள்ல எடுக்கலாம். அதாவது ஒரு நடிகர் வீட்டைவிட்டு கிளம்பற மாதிரியான காட்சி எடுத்துட்டு அவங்க அடுத்த ஷாட்ல வேறு இடத்துக்கு வருகிற மாதிரி காட்சி எடுக்கலாம்.

அப்படி தொடர்ச்சியான ஷாட் வரும்போது நடிகை அல்லது நடிகரோட டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே முன் காட்சியில் உபயோகித்ததே இருக்கவேண்டும். அதனால்தான் இந்த காஸ்ட்யூம் கண்டினியூட்டி என்னு குறித்து வைப்பது மிகவும் தேவையான விஷயம்.

ஒரு நடிகரோ_நடிகையோ ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடிப்பவர்கள் என்பதால் அவர்களால் அன்று அந்தக் காட்சியில் இந்த கலர் டிரஸ் போட்டிருந்தேன் என்று ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. அதனால் இரண்டாவது அசிஸ்டெண்ட் டைரக்டர்தான் அதை ஞாபகத்திற்கு சரியான நிறத்திலுள்ள டிரஸை எடுத்துத்தரவேண்டும்.

தமிழ்: அதோ கையில சின்ன நோட் வச்சிருக்கிறாரே அவர்தான் மூணாவது உதவி இயக்குனரா?

ஆமாம். அவரோட வேலை நடிகர் நடிகையர் பேசும் வசனத்தை பதிவு செய்வது… அதாவது ஷடே்டிங்கில் ‘நாகரா’ என்கிற ஒலிப்பதிவு இயந்திரத்தில் பெரும்பாலும் வசனத்தை பதிவு செய்துவிடுவார்கள். அப்படி ‘நாகரா’ இல்லாத சூழலில் இந்த மூன்றாவது உதவி இயக்குனர்தான் டேப்பில்… வசனத்தை பதிவு செய்யவேண்டும்.

நாகரா இருந்து வசனத்தை பதிவு செய்தாலும் நடிகர் நடிகையர்கள் இயக்குனர் சொல்வதுபோல், வசனப் போப்பரில் எழுதப்பட்டிருக்கும் வசனத்தையும் மீறி ஓரிரு வசனம் அதிகமாக பேசினால் அதை மூன்றாவது உதவி இயக்குனர்தான் குறித்து வைக்கவேண்டும். இது டப்பிங்கிற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும்.

தமிழ் : அதோ கிளாப் போர்டு வச்சிருக்காரே அவர்தான் நாலாவது உதவி இயக்குனர்?

ஆமா. ஒரு படத்திற்கு மிக முக்கியமான விஷயம் கிளாப் போர்டு. அந்த கிளாப் போர்டில் எழுதப்படுகிற எண்களை வைத்துதான் எடிட்டிங்கில் நெகடிவ்வை கட் பண்ணுவார்கள்.

இது இந்த சீன் _ இந்த ஷாட், இந்த டேக்… இந்த டேக் இத்தனை தரம் எடுக்கப்பட்டது என்கிற எல்லா விபரமும் இந்த கிளாப் போர்டு மூலம் அறிந்துவிடலாம்.

இப்படியுள்ள கிளாப் போர்டில், ஒரு டேக் எடுத்து சரியில்லாமல் இரண்டாவது டேக் எடுத்தால் உடனே போர்டில் ஒன்றை அழித்து இரண்டு என எழுதி கேமராவின் முன்பு காட்டி பதிவு செய்யவேண்டும்.

இந்த பதிவு என்பது எப்போது வேண்டுமானாலும் செய்து விட முடியாது. அந்த டேக்கில் நடிகர்_நடிகை நடிக்கத்துவங்குவதற்கு முன்பு இயக்குனர் ஆக்ஷன் என்று சொன்ன நொடியில்… கேமரா இயங்க ஆரம்பிக்கும் நொடியில் மிக சரியாக கேமரா முன்பு கிளாப் போர்ட்டை காட்டிவிட்டு சட்டென்று விலகிச் செல்லவேண்டும்.

கிளாப்போர்டு அடிக்கும் வேலை, கடைநிலை வேலை என்பதால் பெரும்பாலான நேரங்களில் டைரக்டரிடமும் கேமராமேனிடமும் திட்டு வாங்குவார்கள்.