70 ஆண்டுகள் ஆகியும் அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் பாசமலர்

79

இன்றும் நம்மிடையே சிலபேர் கூறுகையில் அவங்க ரெண்டு பேரும், பாசமலர், சிவாஜி கணேசன் – சாவித்திரி மாதிரி’ என பாசமுடன் வாழும், அண்ணன் – தங்கையை பார்த்து பலரும் இன்றும் சொல்வர். அப்படி தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் சகோதரப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளக்கும் படம், பாசமலர். அண்ணனாக, சிவாஜி கணேசன்; தங்கையாக, சாவித்திரி; கணவராக, ஜெமினி கணேசனும் நடித்திருப்பர்.

மலையாள எழுத்தாளர், கே.பி.கொட்டாரக்கரா கதைக்கு, வசனம் எழுதியவர், ஆரூர்தாஸ்.எம்.ஜி.ஆர்., படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர், ஜெமினி கணேசன். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் படங்களுக்கும், ஆரூர்தாஸ் தான் வசன எழுத்தாளர்.

திரையரங்கங்களில் இருந்து கண்ணீரோடு வெளி வந்த மக்களின், பேராதரவோடு, இப்படம், 25 வாரங்கள் ஓடியது. ‘பா’ வரிசை படங்களை இயக்கிய இயக்குனர் பீம்சிங், இப்படத்தில் தனித்துவமான முத்திரை பதித்தார். தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில், இப்படம் உருவானது.

சிவாஜி கணேசனும், சாவித்திரியும் பல படங்களில், காதலர்களாகவும், தம்பதியாகவும் நடித்திருந்தனர். இப்படம் உருவாக்கிய அதிர்வலையில், இனி அவ்வாறு நடிப்பதில்லை என, முடிவெடுத்தனர். அந்தளவிற்கு இருவரும் இப்படத்தில், அண்ணன் – தங்கையாகவே வாழ்ந்திருப்பர்.

மெல்லிசை மன்னர்களின் இசைக்கு, கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல…’ பாடல், காவிய அந்தஸ்து பெற்றது. பாசமலர் போன்ற படங்கள், அவ்வப்போது வந்திருந்தால், அதன் கருத்தை ரசிகர்கள் ஏற்று வாழ்ந்திருந்தால், தமிழகத்தில் கூட்டுக் குடும்பங்கள் நிலைத்திருக்கும்!