கொரோனா வைரஸிற்கு பிறகு சினிமா திரையுலகம் எதிர்கொள்ளும் பெரும் அபாயம்

51

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது வரை 200 நாடுகளுக்கும் மேல் பரவி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகும் ஊரடங்கு தொடருமா என்பது வைரஸ் பரவலின் வீரியத்தை பொறுத்தே அமையும் என்கின்றனர்.


கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை, தியேட்டர்களில் காட்சிகள் இல்லை என சினிமா உலகமும் முடங்கிக் கிடக்கிறது. 21 நாட்கள் கழித்தோ அதற்குப் பிறகோ தியேட்டர்கள் திறக்கப்பட்டால் கூட சினிமாத் துறை மீளுமா என்பது சந்தேகம்தான்.

இந்த ஊரடங்கு கால கட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் பிரைம் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பல புதிய திரைப்படங்கள் எச்டி தரத்தில் இருக்கின்றன. படம் வெளியான 50 நாட்களில் இத்தளங்களில் தமிழ்ப் படங்கள் வந்துவிடுகின்றன.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என பார்க்க வழி உள்ளது. இவற்றிற்கு மக்கள் பழகிவிட்டால் அவர்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் வருவது குறைந்துவிடும்.

அதிகபட்சமாக வருடத்திற்கு 1500 மற்றும் 400 ரூபாய் தான் ஓடிடி தளங்களில் கட்டணமாக வாங்கப்படுகிறது. இந்தப் பணத்திற்குத் தேவையான நிகழ்ச்சிகள், படங்களை மக்களால் பார்க்க முடிகிறது. அப்படியிருக்க ஒரு படத்தைப் பார்க்க குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்தால் 1500 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும். எனவே, மீண்டும் நடுத்தரக் குடும்பங்களை தியேட்டர்கள் பக்கம் பார்ப்பது அரிதாகும்.

ஒரு விஷயத்தில் மக்கள் பழகிவிட்டால், அதிலிருந்து அவர்களை மாற்றுவது கடினம். இப்போதைக்கு மக்கள் ஓடிடி தளங்களில் பழக ஆரம்பித்துவிட்டார்கள். இதை மீறி மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க நிறையவே கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

தமிழ் படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் எவரும் கூட்டமாக இணைவதோ அல்லது பொழுதுபோக்கிற்காக தியேட்டர்களுக்கு வரும் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடும். மேலும் நாடுமுழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் முழுவதும் குறைந்து விட்டது என உலக சுகாதார அமைப்பு கூறினால் தான் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தயாராகி வெளிவரத் தொடங்குவர்.

இன்றைய சூழ்நிலையில் பார்க்கும் போது வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் இந்த நிலைமை மாற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு மாதங்களில் மக்களின் மனதை மாற்றி மீண்டும் தியேட்டர்களில் படம் பார்க்க வைக்க சினிமா திரையுலகம் பெரும் சவாலை சந்திக்கும் என்பது உறுதிபட தெரியவருகிறது.