நடிகர் அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கான படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் மூலம் அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
விஸ்வாசம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சதுரங்க வேட்டை பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க இருக்கிறார்.
அஜித்தை இயக்க இருக்கும் இயக்குநர் வினோத் பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான மங்காத்தா, பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மேலும், யுவன்சங்கர் ராஜா அஜித்துக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.