reviews
Cine Industry :
You are here: / /

Kattappava Kanom - Review

Review

ஒரு வாஸ்து மீனைம மையப்படுத்தி கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் கிளாமர் வெடித்து சிரிக்கவைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவற்றைக் கொண்டு   ஒரு இருள் நகைச்சுவை (Dark comedy) படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் மணி சேயோன். போதுமான அளவு சிரிக்கவைத்து திரையரங்கைவிட்டு வெளியேறுகையில் திருப்திப் புன்னகையுடன் வர முடிகிறது என்ற வகையில் தன் முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் எனலாம் .

பாண்டியன் (சிபிராஜ்) பிறந்ததிலிருந்தே சில தீமைகள் நடப்பதால், அவன் ராசியில்லாதவன் என்று அவனது அப்பா (சித்ரா லட்சுமணன்) முடிவெடுத்துவிடுகிறார். அவன் தொடங்கும் சில தொழில்கள் நஷ்டத்தில் முடிகின்றன. இதுபோல் பாண்டியன் ஏன் Bad luck பாண்டியன் ஆனான் என்பது தேவைக்கதிகமாகவே விவரிக்கப்படுகிறது. பிறகு  மீனாட்சி (ஐஸ்வர்யா) என்ற ஒரு மாடர்ன் சிந்தனை கொண்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறான்.

அதே நேரத்தில் வஞ்சிரம் (மைம் கோபி) என்ற தாதா அல்லது ரவுடி அல்லது கந்துவட்டிக்காரன்(அவர் என்ன செய்கிறார் என்று நாமே ஊகித்துக்கொள்ள வேண்டியதுதான்) ஒரு வாஸ்து மீனை வளர்க்கிறான். அதுதான் தனக்கு நடக்கும் அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று நம்புகிறான். மனைவியை விட அந்த மீனை அதிகமாக நேசிக்கிறான்.

வஞ்சிரம் வீட்டில் திருட வரும்  நண்டு (யோகிபாபு) அந்த மீனைத் திருடிச் செல்கிறான். அது பல கைகள் கடந்து பாண்டியன் - மீனா தம்பதியினருக்கு பரிசுப்பொருளாக வந்து அவர்கள் வீட்டில் தங்கிவிடுகிறது. அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாயில்லாச் சிறுமி கயல் (பேபி மோனிகா) அந்த மீனால் தான் ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும் என்று நம்புகிறாள்.

மீனின் ராசியால் இவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்று எதிர்பார்க்கையில் திடீரென்று சில ரவுடிகள் பாண்டியன் வீட்டுக்குள் புகுந்து அவர்களை மிரட்டுகிறார்கள்.

அது ஏன்? பாண்டியன் - மீனாவுக்கு அந்த ரவுடிகளிடமிருந்து தப்பித்தார்களா? வஞ்சிரம் தொலைத்துவிட்ட மீன் அவனுக்கு திரும்ப கிடைத்ததா? இதையெல்லாம் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்க.
மணி சேயோனின் ஆகப் பெரிய பலம் நகைச்சுவை போலிருக்கிறது. அதுவும் அடல்ட் காமெடி என்று சொல்லக்கூடிய பாலியல் சார்ந்த அல்லது பாலியல் விவகாரங்களை நினைவுபடுத்தி சிரிக்க வைக்கும் நகைச்சுவையில் மனிதர்  துணிச்சலாகப் புகுந்துவிளையாடியிருக்கிறார். இதுதான் படத்தை குறிப்பாக இரண்டாம் பாதியை தொய்வின்றி கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. மற்றபடி கதை, திரைக்கதைக்கெல்லாம் பெரிய மெனக்கெடல் இல்லை.

படம் தொடங்கி முதல் இருபது நிமிடங்கள் சுரத்தில்லாமல் நகர்கிறது. யோகிபாபு வரும் காட்சியிலிருந்து சிரிப்பு வெடிகள் தொடங்குகின்றன. மனிதர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நிறைவாக சிரிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் சிபிராஜ் வீட்டுக்குள் புகுந்து அங்கேயே தங்கிவிடும் ரவுடிகளில் ஒருவரான காளி வெங்கட் அவரது இயல்பான நடிப்பால் கலகலப்பாக்குகிறார். அவரது கூட்டாளியாக வரும் ஜெயகுமார் தக்க துணை புரிகிறார்.  மைம் கோபி, டிடெக்டிவ்வாக வரும் அப்பா சரவணன், லிவிங்ஸ்டன் ஆகியோரும் அவ்வப்போது சிரிக்கவைக்கிறார்கள்.

கமர்ஷியல் சினிமா மரபுரீதியான பல விஷயங்களை முதல் படத்திலேயே  உடைத்திருப்பதற்காக மணி சேயோனைப் பாராட்ட வேண்டும். டூயட் பாடல், நாயகனை வீரனாகக் காட்டும் சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு திரைக்கதையில் இடம் இருந்தும் அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அல்லது மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாயகியை மது அருந்தும் பழக்கமிருப்பவளாகக் காட்டிவிட்டு அதே நேரத்தில் சுயமரியாதையும் சுதந்திர சிந்தனையும் உடைய பெண்ணாகக் காட்டியிருப்பதும் கவனித்துப் பாராட்டத்தக்கது. கடைசிக் காட்சியில் படத்தில் யார் நாயகன் யார் வில்லன் என்ற கேள்வியை வில்லனாக நாம் யாரை நினைத்திருப்போமோ அவர் மூலமாகவே கேட்க வைத்த விதமும் இயக்குனரின் புத்திசாலித்தனத்துக்கு சரியான உதாரணம்.

ஆனால் கமர்ஷியல் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் நோக்கிலோ என்னமோ அந்தக் பள்ளிச் சிறுமி பாத்திரத்தை வைத்து செண்டிமெண்டைப் பிழியோ பிழியென்று பிழிந்திருக்கிறார். 

சிபிராஜ் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். மனைவியிடம் திட்டு வாங்குகிறார், ரவுடிகளிடம் அடிவாங்குகிறார். மொத்தத்தில்  கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் குறைவைக்கவில்லை. கொஞ்சம் கிளாமரிலும்.

சாந்தினி தமிழரசன் மூன்றே காட்சிகளில் வந்தாலும் கிளாமருக்கும் நகைச்சுவைக்கும் நன்கு பயன்பட்டிருக்கிறார். குறிப்பாக அவர் சிபிராஜ் வீட்டில் கிரிக்கெட் பார்க்கும் காட்சியில் (இரட்டை அர்த்த) சிரிப்பு வெடிகள் ஏராளம்.

வஞ்சிரமாக மைம் கோபி, அவரது மனைவியாக நடித்திருப்பவர்,  டாடி சரவணன், லிவிங்ஸ்டன். யோகிபாபு, காளி வெங்கட், சித்ரா லட்சுமணன், சேது, ஜெயகுமார், ஐரா என அனைவரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் பாடல்கள்  கேட்கும்படி இருப்பதோடு அளவாகப் பயனபடுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு, சதீஷ் குமாரின் படத்தொகுப்பு, லட்சுமி தேவ்வின் கலை இயக்கம் ஆகியவை படம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்துக்கு தக்க துணைபுரிகின்றன.

மொத்தத்தில் வயது வந்த சினிமா ரசிகர்களுக்கேற்ற நகைச்சுவைப் படம் என்ற அளவில் ஏமாற்றவில்லை இந்த ‘கட்டப்பாவக் காணோம்’.

0 comments

    No Comments

leave a reply

Your email address will not be published. Required fields are marked (required )

Logo

FLIXWOOD.COM (100% CINEMA) Complete Cine Portal Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, English News, Interviews, Events, Previews, Reviews, Teasers, Trailers, Gallery, Gossips about Kollywood, Tollywood, Sandalwood, Mollywood, Bollywood, Hollywood Cinema, Movies, Celebrities, Short Films.

Feedback

+ 91

Follow Us on