கலைஞானத்திற்கு வீடு வாங்கி தரும் ரஜினிகாந்த்..!

பார்வையாளர்களின் விமர்சனம் கலைஞானத்திற்கு வீடு வாங்கி தரும் ரஜினிகாந்த்..! 0.00/5.00

வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தி சூப்பர்ஸ்டாராக மாற்றிய கலைஞானத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அரைநூற்றாண்டை கடந்த கலைஞானத்திற்கு, இயக்குனர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், நடிகர் ரஜினிகாந்த், பாக்கியராஜ், சிவகுமார், பி.வாசு, பார்த்திபன், கங்கை அமரன், குகநாதன், நடிகர் ராஜேஷ், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜய பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞானம் வாடகை வீட்டில் இருக்கிறார் என்ற விஷயமே எனக்கு இப்பொழுது தான் தெரியவந்தது. இது எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தமிழக அரசு வீடு கட்டித்தரத் தேவையில்லை. நானே என்னுடைய சொந்த செலவில் வீடு வாங்கித் தருவேன். அந்த வீட்டில் தான் அவர் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும், இருப்பார்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். தொடர்ந்து கலைஞானத்திற்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி அணிவித்து தனது வாழ்வை மாற்றிய அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.