சில்க் ஸ்மிதாவின் நீங்காத நினைவுகள்! 20வது ஆண்டு நினைவு தினம்

பார்வையாளர்களின் விமர்சனம் சில்க் ஸ்மிதாவின் நீங்காத நினைவுகள்! 20வது ஆண்டு நினைவு தினம் 0.00/5.00


ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி….


அதில் சினிமா நட்சத்திரங்களை வைத்து சில காட்சிகளை படமாக்கி கொண்டிருப்பார்கள். அதில் ஒரு நடிகை தன் உதவியாளர் குடைபிடிக்க சற்றே இளைப்பாறிக் கொண்டே ஒரு ஆப்பிளை கடித்து சுவைப்பார். மீதமான ஆப்பிளை கீழே வீசுவார். அதை அங்கிருக்கும் இளவட்டங்களும், இளவட்ட வயதைத் தாண்டிய கிழவட்டங்களும் போட்டி போட்டுக்கொண்டு எடுப்பார்கள்.


இந்த காட்சி சினிமாவில் இடம்பெற்றக் காட்சியாகவே பலருக்கும் தெரியும். ஆனால் அது நிஜமாக நடந்த சம்பவத்தின் பிரதி என்பதுதான் உண்மை. தன் நிஜவாழ்வில் நிகழ்ந்ததை தான் இவர்கள் படமாக எடுக்கிறார்கள் என அந்த நடிகைக்கு தெரியும். அப்படியொரு மாஸ் நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா பற்றிய சிறப்புக் கட்டுரைதான் இது!


கடந்த காலம் மட்டுமல்ல… நிகழ்காலத்திலும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சில்க் ஸ்மிதா. ஏன்… எதிர்காலத்திலும் சில்க்கிற்கு நிகர் சில்க் மட்டுமே என்று சொல்லும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் நடை, உடை, பாவனை என அத்தனையும் தனித்துவம் பெற்றது. சில்க் என்ற இந்த ஜொலிக்கும் பெயரை விடுத்து அந்த காலத்து இளைஞர்கள் இளமையை கழித்திருக்க மாட்டர்கள்.


ஒரு காலத்தில், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள், டெக்னீஷியன்கள் என திரையுலகில் அனைத்து அங்கத்தினரும் ஒரு அரைமணி நேரம் கால்ஷீட் தாருங்கள் என கால் கடுக்க அவரது இல்லத்தில் காத்துக்கிடந்தார்கள். அந்த காலத்தில் உச்சத்தில் இருந்த நட்சத்திரங்களின் படங்கள் சற்றே தடுமாறும்போது சில்க்-ன் கிக் பாடல் ஒன்றை சேர்த்து, தங்கள் திரையுலக பயணத்தை சீர் செய்தவர்கள் பலர் என்பது திரையுலக வரலாறு.


பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சந்தித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.


புத்தகத்தில் இருந்து பார்வையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk’?” என பக்கத்தில் உள்ளவரிடம் குறுநகையுடன் கேட்டாராம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அற்புதம் இந்த சில்க்.


கவர்ச்சியான தேகம்…. அதற்கேற்ற ஆடை, கவர்ந்து இழுக்கும் உதடுகள், கவி பாடும் கண்கள், வசீகரிக்கும் வசன உச்சரிப்பு என ஒய்யாரமாய் வலம் வந்த சில்க் மீது தமிழ் திரையுலகம் மட்டுமல்ல; இந்திய திரையுலகமே மோகம் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் வெளிவந்து இன்றைய தலைமுறைகளும் கொண்டாடிய சில்க்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “The Dirty Picture” என்ற படமே அதற்கு சான்று.


உச்சம் தாண்டிய புகழ், எண்ணி சொல்ல முடியாத பணம், இவையெல்லாம் இருந்தும் சில்க்கின் மனம் எதோ ஒரு அமைதியைத் தேடி அலைந்து கொண்டிருந்தது யாரும் அறிந்திடாத உண்மை. அதற்கு அவர் இளமை பருவம், அப்போது நடந்த திருமணம், பாலியல் சீண்டல்கள் எல்லாம்தான் காரணமாக அமைந்திருக்கிறது. எப்போதும் வெடிக்கும் எரிமலைக்கு கீழே இருக்கும் லாவா குழம்பு போல கனன்று கொண்டே இருந்திருக்கிறது அவரது ஆழ் மனம்.


ஆரம்ப காலகட்டத்தில் உச்ச நடிகைகளுக்கு ஒப்பனை கலைஞராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சில்க் கடைசி வரை தன் மனதுக்கு ஒப்பனை இட்டுக் கொள்ளவே இல்லை என்பதுதான் சோகம். சொந்த படம், காதல் தோல்வி, உடனிருப்பவர்களின் துரோகம் போன்றவைதான் சில்க் என்ற சிலையை மேலும் மேலும் நிலை குலையச்செய்தது.


1960, டிசம்பர் 2ம்தேதி பிறந்த சில்க் ஸ்மிதா, 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவனை பிணவறை வாயிலில் சில்க் உடல் இருந்தபோது அவர் மேல் ஈக்கள் மொய்க்க, அதை தட்டி விடக் கூட ஆள் இல்லாமல் இருந்ததை பார்த்தபோது என் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை என தன் ஆதங்கத்தை பகிர்ந்திருந்தார் அவரின் நெருங்கிய தோழியும்,நடிகையமான அனுராதா.


எப்படி வாழணும் ; எப்படி வாழக்கூடாது என்ற இரண்டுக்குமே உதாரணமாகிப் போனார் என்றுமே ஜொலிப்பு குறையாத “சில்க்” ஸ்மிதா. கோடானு கோடி ரசிகர்களின் மனம் மயக்கிய அந்த மெழுகுச்சிலை மறைந்து, இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் வழியாக அந்த வசீகர கண்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.


தமிழ்சினிமாவின் அடுத்தடுத்த காலகட்டங்களில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும்… அவர்களால் இன்னமும் சில்க்கின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை; முடியவும் முடியாது. சூரியன் ஒன்றுதான்… சந்திரனும் ஒன்றுதான் என்பதுபோல… சில்க்கும் ஒன்றுதான்! சில்க் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.


ஏனென்றால் ரசிகர்கள் மனதில் இருந்து அவர் இன்னும் மறையவில்லை. நிரந்தரமாக குடியேறியிருக்கிறார். இடம் காலியானால்தானே அந்த இடத்திற்கு இன்னொருவர் வர முடியும்? இந்த விசயத்துல் சில்க் விதிவிலக்குதான்! அன்றும்… இன்றும்… என்றும்… சில்க், சில்க் தான்.! சில்க் மட்டுமே சில்க்!

  • வே.ராஜபாண்டி