ரஜினிகாந்த் அறிமுகமான “அபூர்வ ராகங்கள்”

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினிகாந்த் அறிமுகமான “அபூர்வ ராகங்கள்” 0.00/5.00

“அபூர்வ ராகங்கள்” கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

அதில் ஒரு விடுகதை:-

“தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?” – இதுதான் வேதாளத்தின் விடுகதை.

அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

கத்திமேல் நடப்பது போன்ற கதை.

கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

“யார் இந்தப் புதுமுகம்?” என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

“ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்” என்று கூறுகிறார், பாலசந்தர்.

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

“மூன்று முடிச்சு” படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது “கவுரவ வேடம்” போன்றதுதான்.

ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

“திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக “அபூர்வ ராகங்கள்” படத்தில் அறிமுகமானேன்.

அந்த `அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.”

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.