காமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ

பார்வையாளர்களின் விமர்சனம் காமிக் உலகின் வித்தகரான மார்வல் ஸ்டான் லீ 0.00/5.00

காமிக் உலகின் வித்தகரான மார்வல் காமிக்ஸின் ஸ்டான் லீ இயற்கை எய்திருக்கிறார். உண்மையில், நாமெல்லோரும் ஸ்டான் லீ உருவாக்கிய காமிக்குகளை படித்து வளர்ந்திருக்க மாட்டோம். நம்மில் பெரும்பான்மைக்கு சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் வழியே தான் ஸ்டான் லீ அறிமுகமாகியிருப்பார்.

 

வெறும் யதார்த்த சினிமாக்களையும், உலக சினிமாக்களையும் மட்டும் தான் பார்ப்போம் என்றிருப்பவர்கள் எல்லாம் கூட ரகசியமாக அயர்ன் மேனையும், கேப்டன் அமெரிக்காவையும் ரசிக்கத் தொடங்கியிருப்போம்.

 

மிக லாவகமாக திட்டமிடப்பட்ட வணிக நோக்கம் மட்டுமே இருக்கிற படங்கள் தான் இவை என்பதை தெரிந்திருந்தாலுமே, சூப்பர் ஹீரோ படங்களை, குறிப்பாக மார்வெல் படங்களை எல்லாம் நம்மால் தவிர்க்கவே முடியாது.

 

கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை கூட்டம் கூட்டமாக சென்று திரையரங்குகளில் பார்த்த தமிழக மக்கள் தான் இதற்கு சாட்சி.

 

ஆனால் இந்த சூப்பர் ஹீரோஸ் பின்னால் இருப்பவர் யார் என தெரிந்து கொள்ள வேண்டாமா…?

 

ஸ்டான்லி மார்டின் லீபர், 1922 -ல் மன்ஹாட்டனில் பிறந்தார். அமெரிக்காவின் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சி அடைந்திருந்த சமயம் அது. அப்பாவிற்கு ஒரு நிரந்தர வேலை இல்லாதது ஸ்டான்லியின் வாழ்வின் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருந்தது.

தன்னுடைய பதினேழு வயதிலேயே ஒரு பதிப்பகத்தில் வேலைக்கு சேர்ந்த ஸ்டான்லி, அப்போதே சூப்பர்ஹீரோ காமிக்குகள் எல்லாம் எழுதத் தொடங்கிவிட்டார்.

 

இரண்டாவது உலகப் போரின் போது குறுகிய காலம் இராணுவத்திற்காக வேலை செய்தது தவிர முழுநேரமுமே காவலர்கள், கவ்பாய் ஹீரோக்கள் பற்றிய கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.

 

பிறகு, 1974 ஆம் ஆண்டில், லீ வேலை செய்து கொண்டிருந்த காமிக் நிறுவனத்தின் உரிமையாளர் குட்மேன், தங்களுக்கு போட்டியாக சூப்பர்ஹீரோ கதைகள் வருவதனால் எதையாவது புதிதாக படைக்க வேண்டும் என ஸ்டான் லீயிடம் கேட்டிருக்கிறார். அப்படித்தான் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் கதைகள் உருவானது.

 

ஃபெண்டாஸ்டிக் ஃபோரின் வருகை, காமிக் ராஜ்ஜியத்தில் ஒரு புதிய தளம் உருவாகக் காரணமாக இருந்தது. 1980-ல் தன்னுடைய படைப்புகளை சினிமாவாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் பார்க்க வேண்டும் என்று விரும்பிய லீ, லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடி பெயர்ந்தார்.

 

ஆனால், 2000-ல் வெளியான எக்ஸ்-மென் படம் தான் ஸ்டான் லீ எதிர்பார்த்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்தது. அதிலிருந்து 2008 ஆம் ஆண்டு வெளியான அயர்ன் மேன் தொடங்கி, 2018-ல் கடைசியாக வெளியான ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் படம் வரை மொத்தமாக வசூலித்தது பதினேழு பில்லியன் டாலர்கள்.

மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களில் எல்லாம் ஸ்டான் லீ ஒரு காட்சியிலாவது வந்துவிடுவார் என்பது போனஸ் சந்தோஷம். அயர்ன் மேன், பிளாக் பேந்தர், அவெஞ்சர்ஸ் என அத்தனை படங்களுக்கும் சமீப காலத்தில் கிடைக்கும் வரவேற்பில் இருந்தே இதை கணித்துவிட முடியும்.

 

குறிப்பாக, பிளாக் பாந்தர் படம் உலகம் முழுதும் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

 

கறுப்பின மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் சூப்பர்ஹீரோ திரைப்படம் என்பதை கடந்து, கறுப்பின மக்களின் கலாச்சாரத்தை குலைத்துவிடாமல் படத்தில் புகுத்தியதையும் கவனித்தோம்.

 

“வேற்றுமைகள் சூழும் நாட்டில் வாழ்கிறோம். உண்மையில், இந்த உலகம் முழுவதுமே வேற்றுமைகள் நிறைந்தது தான். இந்நிலையில், அடுத்த உயிரை மதிப்பது அவசியம்,” என சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஹீரோக்களை உருவாக்குவது குறித்து பேசியிருக்கிறார் ஸ்டான் லீ.

 

குழந்தைகள் மீது இருந்த பிரியத்தினாலா அல்லது அவருடைய இயல்பான குணத்தினாலா எனத் தெரியவில்லை சமீபத்தில் ஆட்டிச குறைபாடு இருந்த ஒரு சிறுவனுக்கு ஸ்டான்லீ சூப்பர்மேன் வரைந்து கொடுத்திருந்தார். சிறுவர்கள் தாங்களாகவே காமிக் வரைவதையும் பெரிதும் வலியுறுத்தியர் ஸ்டான் லீ.

 

அமெரிக்காவில் பல குழந்தைகள் தாங்களாகவே ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கி அதை ஸ்டான் லீக்கு அனுப்புவதும் உண்டு. சூப்பர் ஹீரோவை உருவாக்குவது என்றால், அது வெறுமனே கற்பனையாய் இருக்கக் கூடாது;

அந்த ஹீரோவுக்கு இருக்கும் சக்திக்கு அறிவியல் விளக்கங்கள் இருக்க வேண்டும். இப்படி, பிற்போக்குத்தனத்தை தோற்கடிக்கும் அறிவியலை பரப்பியதற்காகவே ஸ்டான் லீயை பாராட்டலாம்.

 

ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் பிராட், வின்ஸ்டன் டூக், க்ரிஸ் எவன்ஸ் என மார்வல் திரைப்படங்களில் ஹீரோக்களாக வரும் ஹாலிவுட் பிரபலங்களில் பலர் ஸ்டான் லீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

 

“காலத்தை சோதித்து நின்று, எங்களுடைய கற்பனை சக்தியோடு வளர்ந்து கொண்டே இருக்கும் கதாபாத்திரங்களை நீங்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். எங்களுடைய கற்பனை சக்தி இருக்கும் வரை எதிர்காலத்திற்கு எல்லையே இல்லை என்று கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்,”

 

என்று பிளாக் பாந்தர் படத்தின் ஹீரோ வின்ஸ்டன் டூக் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

யோசித்து பார்க்கும் போது, ஸ்டான் லீயின் வாழ்வு நிறைவானதாக தோன்றுகிறது. அது பொய்யாகவும் இருக்கலாம்.

 

ஆனால், “ ஒரு மனிதன் தனியாக மாற்றத்தை உண்டாக்க முடியும்” என்று நம்பிய ஸ்டான் லீ, நிச்சயமாக தன்னுடைய பங்கை செய்து முடித்து தான் இப்போது இளைப்பாறுகிறார்.

 

மதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/