முகவை முதல் ரித்திஷ் குமார் வரை…..

பார்வையாளர்களின் விமர்சனம் முகவை முதல் ரித்திஷ் குமார் வரை….. 0.00/5.00

ஒரு பணக்காரர் பணத்தைப் பணம் என்று பார்க்காமல் அள்ளி வீசுகிறார்…….. அப்போது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் முகவை குமார். யார் அந்த முகவை குமார்… ? எந்தக் கட்சியிலும் இல்லாத அவருக்கு இத்தனை மக்கள் கூட்டம் எப்படி சேர்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. திடீரென கானல் நீர் என்கிற படத்தில் முகவை குமார் நடிக்கிறார்.


அதன் பிறகுதான் முகவை குமார், ரித்தீஷ் குமார் ஆனார். அதன்பின் எங்கு பார்த்தாலும் ரித்தீஷ் குமார் விளம்பரங்களும் சுவரொட்டிகளும் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தன.


திடீரென ஒரு தகவல் ரித்தீஷ் குமார் திமுகவில் இணைந்தார் என்கிற செய்தி. அடுத்த சில மாதங்களிலேயே ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக பல முன்னணி நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு ரித்தீஷ் குமார் அறிவிக்கப்படுகிறார். அவர் அறிவிக்கப்பட்ட அந்த நொடியே அவரது வெற்றியும் உறுதியாகத் தெரிந்தது. காரணம் அந்த அளவிற்கு அவர் முன் பணி செய்து இருந்தார். அந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது தான் அவரது பெயர் சிவகுமார் என்பது தெரியவந்தது.


ரித்திஷ் குமார்… ஜேகே ரித்தீஷ் ஆனார். அரசியல் மாற்றங்கள், புதிய தொழில்கள் என ரித்திஷ் வேறு பரிணாமத்தை அடைந்தார். அதன் பின்பாக அவரை அணுகுவோர் குறைந்தனர். அவரும் தொழிலில் மும்முரம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தின் எங்கோ ஒரு மூலையில் எளிய குடும்பத்தில் பிறந்து, பலரை பணம் படைத்தவர்களாக மாற்றினார். ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒவ்வொரு ஜாதியில் இருந்தும் ஒவ்வொரு அமைப்புகளிலிருந்தும் தனக்கான ஆதரவாளர்களை தீவிர ஆதரவாளர்களாக தக்கவைத்துக் கொண்டது அவருக்கு அதுவே சாதக பாதகம் ஆக மாறினாலும் இறுதிவரை தன்னுடன் இருப்பவர்களை முழு நம்பிக்கையோடு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.


நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சினிமா துறையிலும் ஜேகே ரித்தீஷ் கோலோச்சி அதை கண்டு வியந்ததுண்டு. திடீரென அவர் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்கும் பொழுது அதை அவ்வளவு எளிதாக நம்ப முடியவில்லை.