ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது- கமலஹாசன் வெளியிட்ட தகவல்

105

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். “என்னுடைய திரை உலகத் தந்தை அவர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த “களத்தூர் கண்ணம்மா” (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.

இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-

“ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.

அப்போது, “அன்னை வேளாங்கண்ணி” படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, “என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

“நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!” என்றேன்.

உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். “ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!” என்றார், பாலசந்தர்.

உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, “இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?” என்று கேட்டார்.

பாலசந்தர், “எனக்கு கண் தெரியவில்லையே!” என்றார். ஒரே சிரிப்பு.

இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.

சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். “அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்” என்று கூறி ஆள் அனுப்பினார்.

அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.

“கமலஹாசன் ஒரு ஆக்டர்” என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.

நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு… இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த “ஆய்னா”வில் (இந்தி “அரங்கேற்றம்”) கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்…. உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.

அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.

எனக்கு வந்த கடிதங்களில் “பொக்கிஷம்” என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.

நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து “இங்கேயே படி” என்றார். அந்தக் கடிதம்:-

“எனது இனிய கமல்,

எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.

கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.

வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!

வாழ்த்துக்களுடன்

அன்பன்,

கே.பாலசந்தர்.”

இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.

மற்றொரு கடிதம்: “பதினாறு வயதினிலே” படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் “மை டியர் ராஸ்கல்” என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.

அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் “திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – கே.பாலசந்தர்” என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.

“என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்” என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.”

இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.