சினிமாவிற்கு தந்த கடவுள் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா

132

பட்டுநூலை கோர்த்து பட்டுத்துணியை நெசவு செய்வது போல., ஒளியை நூலாக பிரித்து திரையில் சினிமாவை நெசவு செய்தார் பாலுமகேந்திரா.

இலங்கையில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சுற்றுலா சென்றான். இலங்கையின் கண்டியில் முகாமிட்டிருந்தது அந்த சுற்றுலாக் குழு. அப்பகுதியில் அந்த சமயம் ஆங்கிலப்பட சூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் கருப்பு துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு மெசினைப் பார்த்து அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அந்த சிறுவன். அது தான் ‘மோஷன் பிக்சர் கேமரா’ என்று பாதர் லோரியோ சொன்னார். பிறகு அதனை தொட்டுப் பார்க்க நினைத்த சிறுவனின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

படப்பிடிப்பில் பிஸியாக நின்று கொண்டிருந்த வெள்ளைக்கார இயக்குனர் உரத்த குரலில் ‘Rain’ எனக் கத்தினார் மழை பெய்தது. திடுக்கிட்டான் சிறுவன். “இந்த வெள்ளைக்கார இயக்குனர் ‘RAIN’ என்று சொன்னால் மழை பெய்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய சக்தி உள்ளவர்” என வியந்து போனான் அந்த சிறுவன். தானும் வளர்ந்து ஒரு நாள் அப்படி ஒரு சக்திமிக்க ஆளாக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அந்த இலங்கைச் சிறுவன் தான் பிற்காலத்தில் இந்திய சினிமாவை ஆட்சி செய்த பாலுமகேந்திரா.

இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள கிராமத்தில் 1939’ல் பிறந்தவர் பாலுமகேந்திரா. 1977’ல் வெளியானது ‘கோகிலா’ என்ற கன்னடப்படம். அதுவே பாலுமகேந்திராவின் முதல் படமும் கூட. அப்படம் பாலு மகேந்திராவுக்கு முதல் தேசியவிருதினை பெற்றுத் தந்தது.

பிரதாப் போத்தன்,ஷோபா நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய படம் ‘அழியாத கோலங்கள்’ இயக்குனராக தமிழில் இதுவே பாலுமகேந்திராவின் முதல் படம். பருவ வயதில் காதலுக்கும் காமத்திற்கும் இடையில் தவிக்கும் விடலைப் பையன்கள் பற்றிய படம். அப்போது வரை தமிழ் சினிமா சென்ற பாதையினை அப்படத்தின் மூலம் திசை மாற்றினார் பாலுமகேந்திரா.

சிறுவனாக இருந்த போது முதன் முதலில் கேமராவை தொட்டுப் பார்த்த அனுபவத்தைப் பற்றி கூறும் போது ‘என் வீட்டு வாழைமரத்தின் பின் அன்னலட்சுமியை தொட்ட போது உண்டான சிலிர்ப்பை கேமராவைத் தொட்ட போது உணர்ந்தேன்’ என்றார் அவர். ‘அழியாத கோலங்கள்’ அப்படியான கதைக்களத்தை கொண்டது தான். இப்போது கூட அப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் விடலைப் பருவகாலம் மனக் குகையில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.

1980’ல் வெளியானது மூடுபனி. ஷோபா,பிரதாப்போத்தன் தான் இப்படத்திலும் பாலுவின் தேர்வாக இருந்தது. இளையராஜாவும் பாலுமகேந்திராவும் இணைந்த முதல் படம் இது தான். ‘என் இனிய பொன்நிலாவே..,’ என்ற பாடல் இப்போதும் இரவு நேரங்களில் FM ரேடியோக்களில் ஒலிக்கிறது.

பாலுமகேந்திராவின் திரைவாழ்வில் என்றென்றும் நினைவு கூறத்தக்க ஒரு சினிமா என்றால்., அது ‘மூன்றாம் பிறை’. 1982’ல் வெளியான இப்படத்திற்காக கமல்ஹாசன் மற்றும் பாலுமகேந்திரா இருவரும் தேசியவிருதைப் பெற்றனர். இளையராஜாவின் இசையில் கண்ணதாசன் எழுதிய ‘கண்ணே கலை மானே…’ பாடல் ஐஸ்கிரீம் தலையில் ஜெர்ரிப் பழம் போல அமைந்தது மூன்றாம் பிறைக்கு. அதுவே கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலும் கூட.

தெலுங்கு படமான நிரீக்‌ஷனா, இந்தியில் சாத்மா, மலையாளத்தில் ஓமக்குயில் போன்ற படங்கள் பாலுமகேந்திராவின் கலைவாழ்வில் இன்னும் முக்கியமானவை. இப்படங்களுக்கும் இளையராஜா தான் இசை. தொடர்ந்து கலைப்படங்கள் எடுத்துவந்த பாலுமகேந்திராவுக்கு கமர்ஷியல் படங்கள் எடுக்க வராது என்ற விமர்சனம் எழுந்தது. அதனை அவரும் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை., என்றாலும் ஒரு கட்டத்தில் “நீங்க என் கிட்ட இதத் தானே எதிர்பாக்குறீங்க. இந்தாங்க பிடிங்க” என்பது போல ஒரு சினிமாவை இயக்கினார். 1984’ல் வெளியான அப்படத்திற்கு ‘நீங்கள் கேட்டவை’ என்றே பெயரும் வைத்தார்.

சினிமா பெரிய பொருட்செலவிலான கலை என்ற நம்பிக்கை இன்றளவும் உண்டு. ஆனால் பாலுமகேந்திரா பெரிய பெரிய லைட்டுகளை எல்லாம் நம்பாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மினிமல் லைட்களைக் கொண்டே சினிமாக்களை எடுத்தார். ‘Available lights’ எனப்படும் ஒரு சூழல் அப்போது கொடுக்கும் ஒளியை தன் கேமரா மூலம் கட்டுப்படுத்தி எளிமையாக சினிமா செய்தார் பாலுமகேந்திரா. அதனால் தான் அவரை ‘God Light Cinematographer’ என்றனர்.