ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள்

160

‘காலா’வின் மூலம் கேங்ஸ்டர் கதையில் மறுபடியும் களம் இறங்கி இருக்கிறார் ரஜினி. ஜூன் 7 திரைக்கு வர உள்ள கரிகாலன் பற்றி அரசியல் களத்தில் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.

 

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு அரசியல் வாழ்க்கை கை கொடுத்ததைவிட அரசியல் சார்பு அற்று இருந்த ரஜினிக்கு அது அதிகமாகவே கை கொடுத்துள்ளது.

 

கடந்த சில வருடங்களாக அரசியல் சாயத்தை அதிகம் பூசிக்கொள்ளாத ரஜினி, குறிப்பாக ஜெயலலிதா மறைந்த பிறகு வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 

‘காலா அரசியல் படமல்ல; ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அரசியல் இருக்கு ஆனா இல்ல என இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 

மும்பை தமிழ் மக்களின் உரிமையை பேசும் மண்ணின் மைந்தனாக ரஜினி இதில் வருவதாக தெரிகிறது.

 

உயிர் மூச்சாக நினைக்கும் நிலத்தை மீட்டும் தரும் நாயகனாக ரஜினி காட்சி தர இருக்கிறார். அவருக்கு இணையான வில்லன் இந்தப் படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு கிடைத்துள்ளதாக அவரே கூறியிருக்கிறார்.

 

பொதுவாக வில்லன் பாத்திரம் வலு என்றால், அதில் ரஜினியின் பாத்திரமும் வலுவாக இருக்கும். அவரது பழைய சினிமா வரலாறு அதையே நமக்கு பாடம் புகட்டுகிறது.

 

ரஜினியின் சினிமா கேரியரில் கேங்ஸ்டர் கதைகள் அவருக்கு தனி முகம் உண்டு. ‘ஆறிலிருந்து அறுபது வரை’யில் அப்பாவியாக தெரிந்த முகம் தெறிக்கவிட்டது ‘பில்லா’வில்.

 

இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் உருவான ‘பில்லா’தான் ரஜினியின் திரை வாழ்க்கையை திசை திருப்பியது.

 

80களில் ஹிந்தியில் அமிதாபச்சான் நடித்த ‘டான்’ படத்தின் மறுமுகமாக ரஜினி ‘பில்லா’வில் மாறியிருந்தார். ரீமேக் படம் போல அதை தான் எடுத்துகொள்ள முடியாமல் மிக இயல்பாக தமிழுக்கு மாற்றம் அடைந்திருந்தார் ‘பில்லா’. ‘

 

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்’ பாடல் வரிகள் அவரை கடை மட்டம் வரை கொண்டுபோய் கொண்டாட வைத்தது.

 

பொறுக்கி வில்லனாக ‘பதினாறு வயதினிலே’வில் இருந்த ரஜினி, ஸ்டைலிஷ் வில்லனாக மாறியபோது அது ஆடியன்ஸுக்கு ஈர்ப்பாக இருந்தது.

 

‘பில்லா’ பிளாக்பாஸ்டர் ஹிட். இந்தப் படம் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. அதில் ரஜினியின் நாசுக்கான நடிப்பு பெண் ரசிகர்களை கூட ஈர்த்திருந்தது. அந்தப் படம் அசுரத்தனமான அடையாளமாக அமைந்ததால்தான், 2007ல் அதை ரீமேக் செய்து அஜித் நடிக்க முன் வந்தார்.

 

பழைய கதை. புதிய முகம் என மீண்டும் ஹிட் அடித்தது சினிமா வரலாறு. ரஜினியின் வாழ்க்கைக்கு ஒரு ‘பில்லா’, அஜித் வாழ்க்கைக்கும் ஒரு ‘பில்லா’ என தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

 

அடுத்து ‘நல்லவனுக்கு நல்லவன்’. ரஜினியின் சிறப்பான நடிப்புகளில் இப்படத்திற்கும் தனி இடம் தருகிறார்கள் விமர்சகர்கள். இதுவும் ரீமேக்கில் அமைந்தது தற்செயல்.

 

கிருஷ்ணம் ராஜூவும் ஜெயசுதாவும் கலக்கிய கதையை தமிழுக்கு தாவ வைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

 

ரஜினியின் அதிகப்படங்களை இயக்கியவர் என அறியப்பட்ட முத்துராமன் கையில் ரஜினி முழு பரிமாணம் பெற்றிருந்தார். ரஜினி-ராதிகா காம்பினேஷன் அதிகம் விரும்பப்படும் கூட்டணியாக மாறியது.

 

குடும்ப உறவுகளின் மதிப்பையும் கலந்து கொடுத்தப்படம் என்பதால் பொதுவான ஆடியன்ஸ் அனைவரையும் போய் அடைந்தது இப்படம். 80களில் வெளியான இதுவும் ரஜினியின் திரை வாழ்க்கையை உறுதி செய்தப்படம்.

 

அன்று ‘நல்லவனுக்கு நல்லவன்’படத்தில் ‘மாணிக்கம்’ ஆன ரஜினி பிறகு ‘மாணிக் பாட்ஷா’ வரை வளர்ந்தார். இதையும் அவரது ரசிகள் கொண்டாடி தீர்த்தனர். 152 நாட்கள் ஓடி சாதித்தான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

 

அந்த படம் ரஜினியை ஃபிலிம் பேர் அவார்ட் அளவுக்கு உயர்த்தியது. அன்றைய நிலைமையில் அந்த அவார்ட் அவருக்கு ஒரு அடையாளம்.

 

ஆர்.தியாகராஜன் இயக்கிய ‘ரங்கா’வில் ரஜினி அப்படியே ‘அவசர அடி ரங்கா’வாக வாழ்ந்திருந்தார். இதில் சங்கர்-கணேஷ் இசையில் இடம்பெற்ற ‘பட்டுக்கோட்டை அம்மாளே’ பாடல் மிக பிரபலமானது.

 

குழந்தையை கடத்தும் ஆளாக நுழைந்து பின் வேறு எல்லைகளை நோக்கி விரியும் ரஜினியின் நடிப்பு வேறு அளவில் மிளிர்ந்தது. ரஜினியின் அக்காவாக நடித்திருந்த கேஆர் விஜயாவும், ரஜினியும் மாறிமாறி போட்டிப் போட்டு நடித்திருந்த படம் இது.

 

இந்தப் படத்தில் ரஜினிக்கு அக்காவாக ஜெயலலிதா நடிக்க இருந்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. அந்தப் பொருத்தம் அமைந்திருந்தால் ரஜினியின் திரை வாழ்வில் தனி தன்மையை கொண்ட படமாக இது இடம்பிடித்திருக்கும்.

 

ஆனால் அந்த வாய்ப்பு கேஆர் விஜயாவுக்கு போய் சேர்ந்தது. இதுவும் ரஜினிக்கு ப்ளாக்பாஸ்டர் வெற்றியை கொட்டிக் கொடுத்தப்படம்.

 

அடுத்து ‘பாட்ஷா’. 1995ல் வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது. ஆட்டோ மாணிக்கம் தமிழ் நாட்டையே ஆட்டிப்படைத்தார். எழுத்தாளர் பாலகுமாரன் வசனத்தில் பெரும் புகழ் பெற்றார் ரஜினி. பின்னணி இசை தொடங்கி பாடல்கள் வரை தமிழ் ஆடியன்ஸை பஞ்சர் பண்ண கேங்ஸ்டர் படம் என்றால் அது ‘பாட்ஷா’தான்.

 

ஆண்டனியும் மாணிக்கவும் மாறி மாறி நடிப்பில் உயர்ந்து நின்ற படம். அதேபோல் நக்மாவின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தது.

 

கம்பத்தில் கட்டி வைத்து ரஜினியை அடிக்கும் காட்சியும், கதைவை சாத்திக் கொண்டு ‘சொல்லுங்க சொல்லுங்க..பாம்பேவுல நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?’ என கேட்கும் காட்சியும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு காவியமாக கலந்துவிட்டது.

 

தேவாவின் இசையில் தெறித்த இந்தப்படம், ரஜினி வாழ்வில் உச்சபட்சமான திரைப்படம். ரஜினியின் உச்சப்பட்ச அஃமார்க் திரைப்படமான இது பெற்ற சாதனை தனி. இதை ப்ளாக் பாஸ்டர் ஹிட் என சொல்லமுடியாது. அதுக்கும் மேல என்றே சொல்ல வேண்டும்.

 

ஆனால் ‘பாபா’விலும் ரஜினி கேங்ஸ்டர் அவதாராம் எடுத்தார். ஆனால் அது ஆன்மீகம் கலந்த, குழப்பமான கேங்ஸ்டர் கதை என்பதால், வெற்றி பெறவில்லை. ரஜினிக்கு வியாபார ரீதியாக சரிவை ஏற்படுத்திய படங்களின் வரிசையில் ‘பாபா’ போய் புகுந்தது.

 

இத்தனை கேங்ஸ்டர் கதைகளில் நடித்து அசதியான பிறகுதான் ‘கபாலி’ கதைக்குள் வந்தார் ரஜினி. 2016ல் வெளியானது. ரஞ்சித்திற்கு தனி முகம் தந்தார் ரஜினி. ‘அட்டகத்தி’ அளவுக்கு இருந்த ரஞ்சித்தை உயர்த்தி நிறுத்த வைத்தார் ரஜினி. இந்தக் கதையில் ரஜினிக்கு எந்த லாபமும் இல்லை.

 

ஆனால் அது ரஞ்சித்திற்கு லாபமாக அமைந்தது. அதை ‘காலா’ ஆடியோ விழாவில் ரஜினியே போட்டு உடைத்தார். மனைவியை தேடிக்கொண்டே போகும் காட்சிகள் அலுப்பை தந்ததாக அவர் தெரிவித்தார்.

 

ஆகவே அவரது ஆடியன்ஸ் விரும்பும் கதையை இயக்க இன்னொரு வாய்ப்பு ரஞ்சித்திற்கு போய் சேர்ந்தது. அதுதான் ‘காலா’.

 

இன்னொரு கேங்ஸ்டர் கதையா இது? அல்லது ரஜினியின் திரை வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ப திருப்பிப் போடும் திரைப்படமா இது? அவரது ரசிகர்களை போல நாமும் இப்போதைக்கு காத்துக் கொண்டிருப்போம்.