தணிக்கைக் குழுவின் திரைப்பட சான்றிதழ் மற்றும் நடவடிக்கைகள்

80

மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு அமைச்சரவையின் அங்கமான தணிக்கை குழு பாராளுமன்ற சட்டத்தின் படி அமைக்கப்பட்டது. சினிமடோஃகரப் சட்டம் 1952இன் படி திரைப்பட தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றது.

தணிக்கை குழுவில் இடம் பெறுபவர்களுக்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டு தணிக்கை குழு உறுப்பினர்களால் திரைப்படங்கள் பார்க்கப்பட்டு திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. நீதிமன்றம், நடுவர் மன்றம், தீர்ப்பாயத்திற்கு இணையான அந்தஸ்தைப் பெற்றது திரைப்பட தணிக்கைக் குழு. தணிக்கைக் குழுவால் பார்க்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டால் மேல் முறையீடு செய்யும் வசதிகளும் பெற்றது. தணிக்கை குழுவால் முடிவெடுக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட பிறகு அதுவே இறுதி முடிவு. பாகுபாடுகள் காண்பிக்கப்பட்டிருந்தால் நீதிமன்ற முறையீடுகளுக்கு வழி வகை உண்டு.

திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழுவிற்கு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தணிக்கைக் குழு திரைப்படத்தைப் பார்வையிட்டு, திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகள், காட்சிகளின் தன்மை, வன்முறை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி சான்றிதழ்களை வழங்குகின்றன.

எந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன?

  1. இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் காட்சிகளோ வசனங்களோ உள்ளதா
  2. அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் காட்சிகள் உள்ளனவா
  3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளோ, காட்சிகளோ உள்ளனவா
  4. கண்ணியக் குறைபாடோ, நன்னடத்தைகளுக்கு விரோதமாகவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதா
  5. தனி நபர் தூஷணைகளோ, அவதூறோ இடம் பெற்றிருக்கிறதா
  6. நீதிமன்றங்களை அவமதித்து காட்சிகள் வசனங்கள் கதை கரு உள்ளதா
  7. குற்றச் செயல்களை செய்ய தூண்டும் வகையில் கதையமைப்போ, காட்சிகளோ, வசனங்களோ உள்ளனவா போன்ற பல வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திரைப்படங்களை தணிக்கை செய்கின்றது.

திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ்

திரைப்படத் தணிக்கைக் குழுவில் மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சமூக சேவகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், விமர்சகர்கள் என பல தரப்பட்டவர்கள் இடம் பெறுகின்றனர். தணிக்கைக் குழு எழுப்பும் கேள்விகளுக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் பதிலளிக்க வேண்டிய இடத்திலிருக்கிறார்கள். மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தணிக்கைக் குழு சான்று வழங்கிய பிறகே சந்தைக்கு வர இயலும். தணிக்கைக் குழுவின் சான்று இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடியது. ஒரு திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழின் ஆயுள் 10 ஆண்டுகள்.

தனியொருவரின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டாலும், முறையான தணிக்கைக்குப் பிறகே பொது மக்களின் பார்வைக்கு வருகிறது. திரைப்படத்தின் வெற்றிக்காக, ரசிகர்களின் வேண்டுகோளுக்காக திரைப்படத்தின் நீளத்தை குறைப்பது வழி வழியாக நடந்து வருவது தான். வியாபாரம் சம்பந்தப்பட்டது.

ஆனால், திரை அரங்குகளுக்கு வந்த திரைப்படத்தில் காட்சிகளை நீக்கக் கோருவது நியாயமா என்ற கேள்வி இயல்பானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக காட்சிகளை நீக்க கோருவது போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கருத்து திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் எழுப்பப்படுகிறது. இது போன்ற கோரிக்கைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவது அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது.