மகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம்

பார்வையாளர்களின் விமர்சனம் மகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம் 0.00/5.00

தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, இயக்குநராக பிரகாசித்த மகேந்திரன் (1939 – 2019), தனது இறுதிக் காலத்தில் நடிகராகவும் அத்துறைக்குப் பங்களித்துவந்தவர். கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று எல்லா நிலைகளிலும் அவரது பங்களிப்புகள் உண்டு என்றாலும் இயக்கு நராக அவர் தொட்ட எல்லைகள் தமிழ்த் திரையுலகின் சாதனைகள்.


இந்தியாவில் ஐம்பதுகளிலேயே திரைப்படத் துறையில் புதிய அலை இயக்கம் தொடங்கிவிட்டது என்றாலும், எழுபதுகளின் இறுதியில்தான் அது தமிழ்த் திரையுலகில் தனது தடங்களை அழுத்தமாக பதித்தது. அப்போது, தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் போக்கையும் மாற்றிய முகங்களில் ஒருவர் மகேந்திரன்.


மகேந்திரன் ஒரு தீவிர வாசகர் என்பதால், இலக்கியங்களிலிருந்து திரைப்படங்களுக்கு ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தினார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யையும் உமா சந்திரன், சிவசங்கரி ஆகியோரின் நாவல்களையும் தனது திரைப்படங்களுக்கான கருக்களாகக் கையாண்டார். இலக்கியங்களுக்கு அப்படியே திரை வடிவம் கொடுக்காமல் கலை வடிவங்களின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் அதை மறு-உருவாக்கம் செய்தார்.


அதேநேரத்தில், தான் உத்வேகம் பெற்ற இலக்கியங்களையும் அவற்றைப் படைத்த எழுத்தாளர்களையும் உரிய கௌரவத்தோடு பெருந்திரளான சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினார். ‘இவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?’ என்ற கேள்வியும் அதைத் தொடரும் ஆழ்மன விசாரணைகளும்தான் இலக்கியத்துக்கான தொடக்கப்புள்ளி என்றால், அதைத் திரைப்படங்களுக்கும் நீட்டித்தவர் மகேந்திரன்.


ஊராரின் பழிதூற்றலுக்கு ஆளானாலும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தடுமாறும் ‘உதிரிப்பூக்கள்’ நாயகனும், தங்கையின் பாசத்தை வாழ்நாள் முழுக்கவும் எதிர்பார்க்கும் ‘முள்ளும் மலரும்’ நாயகனும் வழக்கமான சினிமாக்களின் கதாநாயகர்கள் இல்லை; இலக்கியப் படைப்புகளில் மட்டுமே சாத்தியப்படுபவர்கள்.


ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாத எளிமைதான் மகேந்திரனின் அழகியல். அதற்கு ஏற்ற வகையிலேயே அவருடைய படங்களில் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் அமைந்திருந்தன. வணிக சினிமாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் மகேந்திரனின் திரைப்படங்களில் மட்டும் தங்களது வழக்கத்துக்கு மாறாகக் காட்சியளித்தார்கள்.


குடும்ப உறவுகளுக்கு இடையிலான சிடுக்குகள்தான் மகேந்திரன் இயக்கிய படங்களின் மையப்பொருளாக இருந்தன என்றாலும் அவை வழக்கமான தமிழ் சினிமாவின் மிகையுணர்ச்சி நாடகங்களாக மாறிவிடாமல் யதார்த்தத்தின் எல்லைக்குள்ளேயே நின்றன.


நிதானம் கைவரப்பெற்ற காட்சிமொழி அவரது பலம். எனினும், தான் இயக்கிய படங்களின் வாயிலாக மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். அவர் இயக்கிய படங்களுக்கும் கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பங்களித்த படங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளே, ஒரு எழுத்தாளனுக்கு தமிழ் சினிமா கொடுக்கும் இடம் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கின்றன.


இலக்கியமும் சினிமாவும் இணையும் ஒரு அபாரமான மரபை உருவாக்கி நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார் மகேந்திரன். அவருக்குப் பிறகும் அவரது தடத்தில் பயணங்கள் தொடர வேண்டும்.