வெறும் களிமண்ணாக இருந்த என்னை நடிகை ஆக்கினார் – பாலசந்தர் பற்றி சரிதா

158

“திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.


பாலசந்தர் இயக்கிய 15 படங்களில் நடித்தவர் சரிதா. மாபெரும் வெற்றி பெற்ற “மரோசரித்ரா” படத்தின் கதாநாயகி.

அவர் பாலசந்தர் பற்றி கூறியிருப்பதாவது:-


“நான் ஒரு “அ.கெ.மு” என்ன, புரியவில்லையா? அதுதான் “அறிவு கெட்ட முண்டம்.” பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.


திரை உலகிற்கு வருவதற்கு முன் நான் வெறும் களிமண். இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.


என்னை பக்குவமாக “மோல்ட்” செய்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தந்தவர் பாலசந்தர். நடிப்பு என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன, கனபரிமாணங்கள் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு பாலசந்தர் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த இடம் வேறு என்ன இருக்கிறது?


பாலசந்தர் படத்தில் நடிக்கிற எந்த ஆர்டிஸ்டுமே அவர் செய்து காட்டுகிற நடிப்பிலே, பத்து சதவீதம் வெளிப்படுத்தினால் போதும், சிறந்த நடிகராக வரமுடியும்.


தமிழில் என்னுடைய முதல் படமான தப்புத்தாளங்களில் நடிக்கும்போது, எனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஜீரோதான் நான்!


நான் ஓரளவு நடிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பாலசந்தர் சார் என்னிடம் “உன் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வித்தியாசமான ரோல்களாகப் பார்த்து ஒத்துக்கொள். ஒரு சீனில் அழுகிற மாதிரி, இன்னொரு சீனில் இருக்கக் கூடாது. வித்தியாசம் இருக்க வேண்டும். எந்த ஒரு நடிகையின் நடிப்பின் சாயலும் உனக்கு வந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.


இப்போது கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. “நூல்வேலி” தெலுங்குப் படத்திலே ஸ்ரீதேவி நடிச்சி இருந்தாங்க. அதை நான் ஒருதரம் பார்த்தேன். தமிழில் நான் நடிக்கிறபோது, தெலுங்கில் ஸ்ரீதேவி உதட்டைக் கடித்த மாதிரி செய்தேன்.


பாலசந்தர் அதை சட்டென்று கண்டுபிடித்துவிட்டார். “உன்னோட பாணியில் புதுவிதமா அதைச்செய். ஸ்ரீதேவி மாதிரி செய்ய வேண்டுமென்றால், தமிழிலும் ஸ்ரீதேவியையே இந்த வேடத்திற்கு போட்டிருப்பேனே!” என்றார்.


சாதாரணமாக செட்டுக்கு போய்விட்டால் அந்த கேரக்டர் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பேன். மனதை வேறு எங்கேயும் அலைபாய விடமாட்டேன். அதுவும் பாலசந்தர் சார் படம் என்றால், இன்னும் இறுக்கமாக இருப்பேன்.


டைரக்டர் என்னிடம் ஒரு காட்சியை சொல்லி விட்டு, “எப்படி செய்யலாம் என்று யோசித்து வை” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் டயம் கொடுப்பார்.


`இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா’ என்று மனதுக்குள் நூறு முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.


“என்ன, இந்த சீனை எப்படி செய்யப்போறே?” என்று அவர் என்னைக் கேட்கும்போது, நாலைந்து விதமாய் செய்து காட்டுவேன். பளிச்சென்று அவருக்கு ஒருவிதம் பிடித்து விடும். “அப்படியே செய்” என்று சொல்லி, சில மாற்றங்களை மட்டும் செய்து காட்டுவார். அதை அப்படியே நடித்துக்காட்டினால் போதும். காட்சி பிரமாதமாக அமைந்துவிடும்.”

இவ்வாறு சரிதா கூறியுள்ளார்.

பாலசந்தர் டைரக்ஷனில், சிவகுமார், சரிதாவும் இணைந்து நடித்த படம் “அக்னிசாட்சி.” பாலசந்தரின் லட்சிய படங்களில் ஒன்று.

அந்தப்படம் தயாராகும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றி சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

“புதுக்கவிதையில் நாட்டம் உள்ள, சிறு வயதில் மனதில் காயம் ஏற்பட்ட கண்ணம்மா என்பவள்தான் “அக்னி சாட்சி”யின் கதாநாயகி. அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன் (நான்).

`என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்…! ஏனெனில், உன் திருநாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ…!’ என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.

கண்ணம்மா கருத்தரிப்பாள். வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்!

“அன்புக்குழந்தையே! அம்மா எழுதுகிறேன்… தாய்ப்பால் வருவதற்கு முன்பு, தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா…!” என்று துவங்கும் பாடலைப் படமாக்கும்போது, சரிதா, அளவு கடந்த களைப்பு காரணமாக கே.பி. எதிர்பார்த்தபடி செய்யவில்லை.

“இந்த சீன் படத்தில் வரவே வராதுன்னு நெனைச்சு இப்படி நடிக்கிறியா?” என்று சீறினார். அந்தக் கோபத்தின் உக்கிரமë தாங்காமல் சரிதா மயக்கமாகி விட்டார். அப்படியும் அவர் விடவில்லை. தண்ணீர் தெளித்து எழுப்பி, நடிக்க வைத்தார்.

படத்தின் கிளைமாக்ஸ்… சரிதா பிரசவத்தில் இறந்து போவது கதை. “ஒரு `பிரேம்’ கூட சரிதா பிரசவ வேதனைப்படுவதைக் காட்டமாட்டேன்…! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்” என்று என்னிடம் சொல்லி, பிரமாதமாக அந்தக் காட்சியைப் படமாக்கினார்.

பின்னணி இசை (ரீ-ரிக்கார்டிங்) சேர்க்காமல் படத்தை மேனா தியேட்டரில் கே.பி. அவர்களும் நானும் சரிதாவும் பார்த்தோம்.

படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைந்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.

அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்து விட்டார்.

மல்யுத்த மேடைதானே திரையுலகம்…! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! `சிந்து பைரவி’ படம் உருவாக்கினார்.”

இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.