பாலசந்தரின் மற்றொரு புதுமைப்படைப்பு – அவள் ஒரு தொடர்கதை

144

“அரங்கேற்றம்” படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, “அவள் ஒரு தொடர்கதை.” நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.


“அரங்கேற்றம்” படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் “சொல்லத்தான் நினைக்கிறேன்.”


இது, ஆனந்த விகடனில் “மணியன்” எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-


“ஆனந்த விகடனில் நான் “இலவுகாத்த கிளி” என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் “சொல்லத்தான் நினைக்கிறேன்.”


அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.


நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். “நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.


சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, “மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.


நான் சிறிதும் தயங்கவில்லை. “இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்” என்று பதில் சொன்னேன்.

`
சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.”

இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.


“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த “நான் அவனில்லை” என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் “அவள் ஒரு தொடர்கதை.”

வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் “சுகி” சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் “வாழ்க்கை அழைக்கிறது” என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் “அவள் ஒரு தொடர்கதை” என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்’ ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். “கடவுள் அமைத்து வைத்த மேடை…” என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

13-11-1974-ல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை” மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, “மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்” என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

“அரங்கேற்றம்” தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் “அவள் ஒரு தொடர்கதை.”

இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் “பிசி”யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், “சினிமாவா? வேலையா?” என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். “வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.

அப்போது ஏவி.எம்., “உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.