காதல் காட்சி

53

இயற்கையன்னையின் கருணையினால் இணைந்த இரு உள்ளங்களில் தோன்றும் காதல் எண்ணங்கள் கண்களின் வழியே பரிமாறப்பட்டு இதயங்களில் இசைந்து இருமனம் ஒருமனமாவது தெய்வீகக் காதல்.

தமிழில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களில் மிகவும் அதிகமாக விவரிக்கப் பட்டிருப்பது காதலே எனில் அது மிகையாகாது.

“எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்”

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது.

அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.

அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.