அஜித் – விஜய் படத்தின் ஒற்றுமை !

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்விஜய் படத்தின் ஒற்றுமை ! 0.00/5.00

இன்று தமிழ்த் திரையுலகில் இரண்டு மிக முக்கியமான ஆளுமைகள் என்றால் அஜித் மற்றும் விஜய் என்று தமிழர்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் உள்ள அனைவருமே சொல்லிவிட முடியும்.

ஏனென்றால் இவர்கள் இருவரின் ரசிகர்கள் இவர்களின் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர், படம் ஆகியவை வெளியாகும்போது அது பற்றி எழுதி இந்திய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்டாக்கிவிடுகின்றனர்.

இது மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான நடிகரின் போட்டி நடிகரை விமர்சிப்பது, கலாய்ப்பது, இழிவான வார்த்தைகளால் வசை பாடுவது மீம்களை வெளியிடுவது என்று எதிர்மறையான வகையிலும் இந்த நடிகர்களின் பெயர் ட்ரெண்டாகிவிடுகின்றது அதாவது தேசிய அளவில் அல்லது உலக அளவில் பிரபலமாகிவிடுகிறது.

இது போல் விஜய்-அஜித் ரசிகர்களுக்கிடையிலான போட்டி மனப்பான்மை பகையாக உருவெடுத்திருப்பது பல்வேறு தரப்பினரை கவலையடையச் செய்துள்ளது. இதுபோல் பகையுணர்வை வளர்த்துக்கொள்ளும் பலரும் இளைஞர்கள் என்பது இந்தக் கவலையை அதிகரிக்கிறது.

இந்நிலையில் நடிகர்கள் விஜய்யும் அஜித்தும் தொழில் போட்டியாளரகளே தவிர நிஜ வாழ்வில் நண்பர்கள்தன் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் பகையுணர்வு குறித்து அவர்கள் வெளிப்படையாக எதுவும் பேசாமல் இருப்பதை ஊடகங்கள் விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில் விஜய் அஜித்தின் அண்மைக் காலப் படங்கள், அவர்கள் இருவரும் தங்கள் படங்கள் மூலமாக ரசிகர்களுக்கிடையில் நட்புப் பாலம் கட்ட முயலத் தொடங்கியிருக் கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன.

விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வேதாளம் என்ற இனத்தைச் சேர்ந்தவராக விஜய் நடித்திருந்தார். அடுத்ததாக வெளியான அஜித் படத்தின் பெயர் ’வேதாளம்’…!!!

’வேதாளம்’ படத்தின் தீம் மியூசிக்கில் தெறி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. படத்திலும் ”தெறிக்கவிடலாமா” என்றுஅஜித் கேட்கும் வசனம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்றது. இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்கு ‘தெறி ’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய்யின் ’தெறி’ படத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தை தலைப்பாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது.

இவையெல்லாம் திட்டமிட்டு நடக்கின்றன்வா அல்லது எதேச்சையாக அமைகின்றனவா என்பது அந்தந்த படக்குழுவினருக்கே வெளிச்சம். ஆனால் இது போன்ற சுவாரஸ்ய ஒற்றுமைகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இனிமையான ஆச்சரியங்களாக அமைகின்றன என்பது மட்டும் உறுதி.

இதுபோன்ற ஆச்சரியங்கள் தொடர்ந்து அஜித்-விஜய் ரசிகர்கள் நிரந்தர ஒற்றுமை ஆகும் ஆச்சரியம் நிகழும் என்று நம்புவோம்.