Primary Menu

Top Menu

பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய நாவல் “47 நாட்கள்”

வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?


இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி “47 நாட்கள்” என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-


“முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.


நான் எழுதிய “47 நாட்கள்” கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.


தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.


பாலசந்தர் என்னிடம், “47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது” என்றார்.


திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!


என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.


“ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்” என்றார், பாலசந்தர்.


“47 நாட்கள்” படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.


டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.

இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-


“ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டுபிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை “மன்மதலீலை”யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.

நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, “உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!” என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.

“லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?” என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். “படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்” என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.

நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம். 

“மழலைப்பட்டாளம்” ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, “அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!

“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் “ஒரு நிமிடம்” என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். “நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. “நவக்கிரகம்” படப்பிடிப்பு நடந்து வந்தபோது, “நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்” என்று அவரிடம் கூறினேன்.

“சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்” என்று பாலசந்தர் கூறினார்.

இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.

“அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!” என்றார்.

“ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னேன்.”

இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.